சவூதி அரேபியாவில் எதிர்கால முதலீட்டு முன்முயற்சி மாநாடு: மத்திய அமைச்சர் பங்கேற்பு

சவூதி அரேபியாவின் ரியாத்தில் நாளை நடைபெறும் 7-வது 'எதிர்கால முதலீட்டு முன்முயற்சி' மாநாட்டில் அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார்.;

Update: 2023-10-23 09:25 GMT

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.

சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் 7-வது 'எதிர்கால முதலீட்டு முன்முயற்சி' மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார்.

சவூதி அரேபியாவின் ரியாத்தில் 2023 அக்டோபர் 24 , 25-ல் நடைபெற உள்ள 7-வது எதிர்கால முதலீட்டு முன்முயற்சி மாநாட்டில் மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்  பியூஷ் கோயல் பங்கேற்கிறார்.

இந்நிகழ்வின் போது, சவூதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர், இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் அல்-சவுத் உள்ளிட்ட சவூதி அரேபிய பிரமுகர்களை அமைச்சர் சந்திக்க உள்ளார். வர்த்தக அமைச்சர் மஜீத் பின் அப்துல்லா அல்கஸ்ஸாபி; முதலீட்டு அமைச்சர்  காலித் ஏ. அல் ஃபாலிஹ்; தொழில்துறை மற்றும் கனிம வள அமைச்சர் பண்டார் பின் இப்ராஹிம் அல்கொராயிப் மற்றும் பொது முதலீட்டு நிதிய ஆளுநர் யாசிர் ருமையன் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

"இடர்பாட்டிலிருந்து வாய்ப்பு வரை: புதிய தொழில் கொள்கை சகாப்தத்தில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கான உத்திகள்" என்ற தலைப்பிலான ஒரு மாநாட்டில் சவூதி அரேபியா முதலீட்டு அமைச்சருடன் இணைந்து பியூஷ் கோயல் தலைமை தாங்குகிறார். சவூதி பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய சமூகத்தினருடன் அவர் கலந்துரையாடுகிறார். உலகெங்கிலும் உள்ள வணிகத் தலைவர்கள் மற்றும் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளையும் அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்கால முதலீட்டு முன்முயற்சி நிறுவனம் என்பது சவூதி ஆரேபியா அரசால் தொடங்கப்பட்ட ஒரு உலகளாவிய இலாப நோக்கற்ற அறக்கட்டளையாகும். உலகளாவிய "மனிதசமுதாயத்தின் மீதான தாக்கத்தை" உருவாக்கும் நோக்கத்துடன் முதலீட்டிற்கான புதிய பாதைகளைப் பற்றி விவாதிக்க உலகெங்கிலும் உள்ள அரசு மற்றும் வணிகத் தலைவர்களை ஒன்றுதிரட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் ரோபோடிக்ஸ், கல்வி, சுகாதாரம் மற்றும் நீடித்த தன்மை ஆகிய நான்கு துறைகளில் கவனம் செலுத்துகிறது.

Tags:    

Similar News