கர்நாடக பாஜக தேர்தல் வாக்குறுதி: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர். தினமும் அரை லிட்டர் பால்
கர்நாடாகாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக. ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் , தினமும் அரை லிட்டர் பால் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது
கர்நாடகாவில் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. கர்நாடகாவில் வரும் 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் ஜேபி நட்டா, கர்நாடகா தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையான 'பிரஜா த்வானி'யை பெங்களூரு கட்சி தலைமையகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா முன்னிலையில் நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
கட்சியின் தேர்தல் அறிக்கை இளைஞர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. அதில், கர்நாடகாவில் பாஜக வென்றால், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, யுகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு, இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில அம்சங்கள்:
- ஏழை குடும்பங்களுக்கு தினந்தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்
- மாநிலம் முழுவதும் மலிவு விலையில், தரமான மற்றும் ஆரோக்கியமான உணவை வழங்குவதற்காக ஒவ்வொரு மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் பாஜக 'அடல் ஆஹாரா கேந்திரா' அமைக்கப்படும். .
- மாதந்தோறும் ஐந்து கிலோ ரேஷன் பருப்பு ஆகியவை ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்
- வீடு இல்லாத 10 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைகள் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும்
- பட்டியல், பழங்குடி குடும்ப பெண்கள் வங்கியில் ரூ.10000 வைப்புத் தொகை செலுத்தினால், கூடுதலாக 10 ஆயிரம் தரப்படும்.
- வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் 30 லட்சம் பேருக்கு இலவச பேருந்து பாஸ் வழங்கப்படும்.
- வயதானவர்களுக்கு ஆண்டு தோறும் இலவசமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும்
- விவசாயிகள் 50 கிலோ வரையிலான விலை பொருட்களை இலவசமாக அரசு பேருந்துகளில் கொண்டு செல்ல அனுமதி
- சூரிய சக்தி பம்பு செட் அமைக்க விவசாயிகளுக்கு 80% மானியம் வழங்கப்படும். உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
- அடுத்த தலைமுறைக்கு பெங்களூருவை 'மாநில தலைநகர் மண்டலம்' என்று பெயரிட்டு, வாழ்க்கையின் எளிமை, ஒருங்கிணைந்த போக்குவரத்து நெட்வொர்க்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை டிஜிட்டல் மையமாக மாற்றும் வகையில் விரிவான, தொழில்நுட்பம் சார்ந்த நகர மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த கட்சி திட்டமிட்டுள்ளது.
- UCC நடைமுறைப்படுத்தப்படும்
- கர்நாடகாவில் NRC அறிமுகப்படுத்தப்படும்
இதற்கிடையில், மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கர்நாடக மக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் பெண்களுக்கான திட்டங்கள் உட்பட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.