ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு திடீர் உடல் நலக்குறைவு

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2024-02-04 14:49 GMT

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ராஜஸ்தான் முதல்வராக இருந்தவர் அசோக் கெலாட். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. பாஜக வென்று ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் தான் தற்போது காங்கிரஸ் தலைவர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் அசோக் கெலாட்டுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அசோக் கெலாட்டுக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்திருந்த நிலையில் அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் கெலாட் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்பதற்கு விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவரது விருப்பம் நிறைவேறாமல் போனதுடன் சட்டமன்ற பொது தேர்தலிலும் தோல்வியை தழுவி முதல்வர் பதவியையும் இழந்ததால் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் தான் அவருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News