இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு

300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தொடர்ந்து இலவச தரிசன டோக்கன்களையும் ஆன்லைனில் பக்தர்களுக்கு வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு

Update: 2021-09-14 00:55 GMT

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் பக்தர்களுக்கு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறினார். 

இது குறித்து அவர் கூறுகையில் இலவச தரிசன டோக்கன்களை திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் வழங்கினால் அவற்றை வாங்குவதற்காக ஏராளமான எண்ணிக்கையில் பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள். எனவே கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் இலவச தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறை கடந்த சில மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 2000 என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் வெளியூர் பக்தர்கள் தங்களுக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். இதுதவிர ஏராளமான பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்கள் தங்களுக்கும் கிடைக்கும் என்ற ஆசையில் தினமும் திருப்பதிக்கு வெளியூர்களில் இருந்து வந்து திரும்பி செல்கின்றனர்.

இலவச தரிசன வாய்ப்பு இல்லாத காரணத்தால் வேண்டுதல்களை நிறைவேற்ற இயலாத நிலையில் இருக்கிறோம் என்று சாதாரண பக்தர்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை போல் இலவச தரிசன டோக்கன்களையும் ஆன்லைனில் பக்தர்களுக்கு வெளியிட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை துவக்கி உள்ளது. இந்த நிலையில் இன்னும் ஒரே வாரத்தில் இலவச தரிசன டோக்கன்கள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு கிடைக்கும் என்று கூறினார்.

Tags:    

Similar News