மாம்பழ பையில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி! பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்
பெங்களூருவில் ஆவணங்கள் இல்லாமல் மாம்பழ பையில் கடத்தப்பட்ட 4 கோடி ரூபாயை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்;
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருள், மது உள்ளிட்டவற்றை வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் வாகனச்சோதனையிலும் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், பெங்களூரு தேர்தல் அதிகாரிகளுக்கு இன்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் ஜெயநகரில் ஒரு காரில் கோடிக்கணக்கான ரூபாய் கடத்தப்படுவதாகவும், ஸ்கூட்டியில் இருந்து பணம் கைமாற்றப்பவதாகவும் கூறி விட்டு அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் அவ்வழியாக வந்த கார்களை நிறுத்தி சோதனையிட துவங்கினர். அப்போது ஜெயநகர் 4வது பிளாக்கில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில், மாம்பழங்கள் கொண்டு செல்லப்படுவதாக அந்த வாகனத்தில் இருந்தவர்கள் கூறினர். அத்துடன் வாகனத்தை சோதனையிட விடாமல் தடுத்தனர்.
இதனால் சந்தேகமடைந்த தேர்தல் பறக்கும் படையினர், அந்த காரில் மாம்பழங்களுக்கு மத்தியில் இருந்த பையை சோதனையிட்டனர். அதில் 4 கோடி ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆவணங்கள் இல்லாமல் காரில் அந்த பணத்தை கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது காரில் வந்த 5 பேரும் தலைமறைவானார்கள்.
காரில் கொண்டுவரப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்த அந்த பணம் கொண்டு செல்லப்பட்டதா என தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாம்பழங்களுக்கு மத்தியில் 4 கோடி ரூபாய் கடத்தி வரப்பட்டது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.