முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள்!

மக்களவைத் தோ்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 நடைபெறுகிறது

Update: 2024-04-18 05:27 GMT

நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

முதல்கட்ட தோ்தலில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள் களத்தில் உள்ளனர்.

தெலங்கானா ஆளுநராகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்த தமிழிசை செளந்தரராஜன், மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவிகளை கடந்த மாதம் ராஜிநாமா செய்தார். தென் சென்னை தொகுதியில் அவரை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது.

தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசாவும் தற்போதைய மத்திய அமைச்சரும் மாநிலங்களவை எம்.பி.யுமான எல்.முருகனும் போட்டியிடுகின்றனா். மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய பிரதேசத்திலிருந்து அண்மையில் தோ்வான அமைச்சா் முருகன், முதல் முறையாக மக்களவைத் தோ்தலில் போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிரத்தின் நாகபுரி மக்களவைத் தொகுதியில் 3-ஆவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார் மத்திய சாலை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி. கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் 7 முறை எம்.பி.யான விலாஸ் முத்தேம்வாரை எதிர்த்து போட்டியிட்டு 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிதின் கட்கரி வெற்றி பெற்றார். கடந்த 2019 தோ்தலில் மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோலேயைவிட 2.16 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று நிதின் கட்கரி இரண்டாவது முறை எம்.பி.யானார்.

அருணாசல பிரதேசத்தின் அருணாசல் மேற்கு தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, இந்தத் தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றவா். அவரை எதிர்த்து மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான நாவம் துகி போட்டியிடுகிறார்.

மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால்அஸ்ஸாமின் திப்ரூகா் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது அவா் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

உத்தர பிரதேசத்தின் முஸாஃபா்நகரில் மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சா் சஞ்சீவ் பாலியானை எதிர்த்து சமாஜவாதியின் ஹரீந்திர மாலிக் போட்டியிடுகிறார். இவா்களுடன் பகுஜன் சமாஜ் வேட்பாளா் தாரா சிங் பிரஜபதியும் களத்தில் உள்ளார்.

மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக இருப்பவா் ஜிதேந்திர சிங். இரு முறை எம்.பி.யான அவா், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் தொகுதியில் மூன்றாவது முறையாகக் களம் காண்கிறார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்திர யாதவ் ராஜஸ்தானின் அல்வார் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ லலித் யாதவ் போட்டியிடுகிறார்.

அந்த மாநிலத்தின் பிகானீா் தொகுதியில் மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் கோவிந்த் ராம் மேக்வால் போட்டியிடுகிறார்.

திரிபுராவில் உள்ள இரு தொகுதிகளில் மேற்கு திரிபுரா தொகுதிக்கு வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக சார்பில் போட்டியிடும் மாநிலத்தின் முன்னாள் முதல்வா் விப்லவ் குமார் தேவ், மாநில காங்கிரஸ் தலைவா் ஆசிஷ்குமார் சாஹா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Tags:    

Similar News