விசாகப்பட்டினம் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து
விசாகப்பட்டினம் ஜெகதம்பா சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்
விசாகப்பட்டினம் ஜகதம்பா சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மதியம் 2 மணி வரை எந்த உயிர்சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை, மின் கசிவே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு சில கர்ப்பிணிகள் உட்பட கிட்டத்தட்ட 50 நோயாளிகள் தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்களால் வெளியேற்றப்பட்டனர்.
மருத்துவமனையின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் அடர்ந்த புகை சூழ்ந்தது. சூர்யாபாக்கில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பெரும்பாலான நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட நிலையில், மருத்துவமனை வளாகத்தில் அடர்ந்த புகை மூட்டத்தால், ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட சில நோயாளிகளை அழைத்து வர தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. தீயணைப்புப் படையினர் கண்ணாடிகளை உடைத்து ஏணிகளைப் பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நோயாளிகள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீஸ் கமிஷனர், ஏ.ரவிசங்கர், அதிகாரிகளுடன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள ஆபரேஷன் தியேட்டரில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட்டே விபத்துக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது என்றார். இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் குறித்து குழுக்கள் முழுமையாக ஆய்வு செய்யும்.
மருத்துவமனையில் இருந்த 50-70 க்கும் நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டதாவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.