வேகமாக பரவும் இன்ப்ளூயன்சா காய்ச்சல்: 2 பேர் பலி
இந்தியாவில் பரவி வரும் இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.;
இந்தியாவில் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எச்3என்2 இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அறிகுறிகள்:
காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும். இந்த வைரஸ் கொரோனாவை போல வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. எச்3என்2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு ஒசெல்டமிவிர், ஜானமிவிர், பெராமிவிர் மற்றும் பலோக்ஸாவிர் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நாமாக சென்று மருந்தகங்களில் மருந்துகளை வாங்க கூடாது. கட்டாயமாக மருந்துவரிடம் அணுகி அதன்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நாம் பின்பற்றி வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதாவது கைகளை கழுவுதல், முக கவசம் அணிதல், நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல், சானிடைசர் உபயோகப்படுத்துதல் போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதால் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசிகள் மற்றும் வழக்கமான கைகளை கழுவுதல் ஆகியவை அடங்கும் . குறிப்பாக கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு, உணவு உட்கொள்ளும் முன் மற்றும் உங்கள் முகம், மூக்கு அல்லது வாயைத் தொடும் முன். மக்கள் நெரிசலான பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்புகொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்.