பிரபல ஹிந்துஸ்தானி பாடகர் கங்குபாய் ஹங்கல் காலமான தினமின்று
கங்குபாய் ஹங்கல்- தந்தை விவசாயி. தாய், தியாகராஜர் கீர்த்தனைகளை மகளுக்கு கற்றுத் தந்தார். சிறு வயதில் பெற்ற இசை ஞானம்தான் இவரது நீண்ட நெடிய இசைப் பயணத்துக்கு அடிப்படையாக அமைந்தது.
பிரபல ஹிந்துஸ்தானி பாடகர் கங்குபாய் ஹங்கல் காலமான தினமின்று
கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் (1913) பிறந்தார். தந்தை விவசாயி. தாய், தியாகராஜர் கீர்த்தனைகளை மகளுக்கு கற்றுத் தந்தார். சிறு வயதில் பெற்ற இசை ஞானம்தான் இவரது நீண்ட நெடிய இசைப் பயணத்துக்கு அடிப்படையாக அமைந்தது.
குழந்தையாய் இருந்த போது வாழ்ந்த தார்வாட் நகர தெருக்களில் கிராமபோன்களில் ஒலித்த இந்துஸ்தானி இசை இவரை மிகவும் கவர்ந்தது. அவரது ஆர்வத்தைக் கண்ட தாய், 1913-ல் இந்துஸ்தானி மேதை கிருஷ்ணாச்சார்யாவிடம் இசை கற்க ஏற்பாடு செய்தார்.
அந்த குருவின் கிராமம் வெகு தொலைவில் இருந்தது. ரயிலிலும், பின்னர் நீண்ட தூரம் நடந்து சென்றும் இசை பயின்று வருவார். ஆனால் பெண்கள் பெரும்பாலும் வீட்டிலேயே அடைந்துகிடந்த காலக்கட்டம் அது. இசை கற்பதற்காக வெளியே சென்றுவரும் இவரை அக்கம்பக்கத்தினர் தவறாகப் பேசினர்.
டப்பாக்களை அடித்து சத்தம் எழுப்பி, இவர் பயிற்சி செய்வதை தடுப்பார்கள். தாங்கமுடியாத மன உளைச்சலுக்கு ஆளானாலும், தான் சிறந்த பாடகியாக வரவேண்டும் என்ற வைராக்கியத்துடனும், துணிச்சலுடனும் தடைகளை எதிர்த்து கடுமையாகப் போராடி வென்றார்.
ஆரம்பக் கல்வி மட்டுமே கற்ற இவர், தத்தோபந்த் தேசாய், சவாய் கந்தர்வா உள்ளிட்ட ஜாம்பவான்களிடம் இசை கற்று சிறந்த இசைக் கலைஞர் எனப் போற்றப்பட்டார். மல்லிகார்ஜுன், மன்சூர், பீம்சேன் ஜோஷி ஆகியோருக்கு இணையாக பேசப்பட்டார். இசையில் ஆத்மார்த்தமான ஈடுபாடு, தீவிர சாதகம் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே இவ்வளவு பெரிய அந்தஸ்தை இவரால் வசப்படுத்திக்கொள்ள முடிந்தது.
நாடெங்கும் பல நகரங்களில் இந்துஸ்தானி இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். அகில இந்திய வானொலியில் இவரது பாடல்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகின. பண்டிகைகளில் பாடுவதற்கு பல பகுதிகளில் இருந்தும் அழைப்புகள் வந்தன. நாடு முழுவதும் இவரது புகழ் பரவியது.
70 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த இவரது இசைப் பயணத்தில் மத்திய அரசு, கர்நாடக அரசின் விருதுகள் உட்பட கணக்கிலடங்கா விருதுகள், பட்டங்கள், கவுரவங்கள் இவரை நாடிவந்து குவிந்தன. 1962-ல் கர்நாடக சங்கீத் நிருத்ய அகாடமி விருது பெற்றார்.
பத்மபூஷண், பத்ம விபூஷண், தான்சேன், ரூஹே கஜல் பேகம் அக்தார், புவால்கா, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றார். கர்நாடகா, குல்பர்கா, டெல்லி பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன. இவரது திறமைகள், சாதனைகளை கவுரவிக்கும் விதமாக கர்நாடகா பல்கலைக்கழகம் இவருக்கு இசைப் பேராசிரியர் பதவி வழங்கிச் சிறப்பித்தது..
இந்துஸ்தானி இசைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய கங்குபாய் ஹங்கல் 96-வது வயதில் (2009) இதே நாளில் மறைந்தார்.