அக்னிபத் விளைவுகள் குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
அக்னிபத் திட்ட விளைவுகள் குறித்து ஆராய ஓய்வு நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முப்படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான திட்டமே அக்னிபத். இதில், 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பணியில் சேரலாம். இவர்களில் 75 சதவீதம் பேர் 4 ஆண்டுக்குப் பின் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். அவர்களுக்கு பென்சன் கிடையாது. இந்த திட்டத்தால் புதிதாக ராணுவத்திற்கு ஆள் தேர்வு நடைபெறாது எனவும், ஏற்கனவே தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கும் வாய்ப்பு இல்லை எனவும் ஒரு கருத்து பரவியது.
இந்நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை ராணுவத்தில் புகுத்தி பயிற்சி அளிக்க பா.ஜ.க மறைமுகமாக திட்டமிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அக்னிபத் திட்டம் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தி டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த திட்டத்தால் ஏற்படும் தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் மற்றும் ராணுவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.