பாரதத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு உலகெங்கிலும் தேவை அதிகரித்திருக்கிறது -பிரதமர் நரேந்திர மோடி

பாரதம் கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், அதாவது, 30 இலட்சம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது -பிரதமர் நரேந்திர மோடி

Update: 2022-03-27 11:59 GMT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில், 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி, 87 வது முறையாக அவர் இன்று நாட்டு மக்களுடன் உரையாடினார்.

அந்த உரையில் அவர் பேசியதாவது:

பாரதம் கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், அதாவது, 30 இலட்சம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது. முதன்முறையாகக் கேள்விப்படும் போது இது ஏதோ பொருளாதாரம் தொடர்பான விஷயமாகப் பட்டாலும், பொருளாதாரத்தையும் தாண்டி, பாரதத்தின் வல்லமை, பாரதத்தின் ஆற்றல் ஆகியவற்றோடு தொடர்புடைய விஷயம் இது. ஒரு காலத்தில் பாரதத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை பற்றிய புள்ளிவிவரம் ஏதோ 100 பில்லியன், சில சமயம் 150 பில்லியன், சில வேளை 200 பில்லியன் டாலர்கள் என்பது வரை இருந்திருந்தது. ஆனால் இன்றோ, பாரதம் 400 பில்லியன் டாலர்களை எட்டிவிட்டது. இதன் பொருள் என்னவென்றால்,

பாரதத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேவை உலகெங்கிலும் அதிகரித்திருக்கிறது என்பது ஒன்று; மேலும் இரண்டாவதாக பாரதத்தின் விநியோகச் சங்கிலி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பலமடைந்து வருகிறது என்ற மிகப்பெரிய செய்தியையும் இது நமக்களிக்கிறது. நாம் கனவு காண்பதற்கேற்ப மகத்தான உறுதிப்பாடுகளை நாம் ஏற்கும் போது, தேசம் விசாலமான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. மேற்கொள்ளப்பட்ட உறுதிப்பாடுகளுக்காக இரவுபகலாக நேர்மையாக முயற்சிகள் செய்யப்படும் போது, அந்த உறுதிப்பாடுகள் மெய்ப்படவும் செய்கின்றன, எந்த ஒரு நபரின் வாழ்க்கையிலும் கூட இவ்வாறே தான் நடக்கிறது என்பதை நீங்களும் கவனித்திருக்கலாம். ஒருவருடைய மனவுறுதிப்பாடு, அவருடைய முயல்வு, அவருடைய கனவுகளை விடவும் பெரியதாக இருக்கும் போது, வெற்றித்திருமகள் தானே அவரை நாடித் தேடி வருகிறாள்.

தேசத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் புதியபுதிய பொருட்கள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அஸாமின் ஹைலாகாண்டியின் தோல் பொருட்களாகட்டும், உஸ்மானாபாதின் கைத்தறிப் பொருட்களாகட்டும், பீஜாபூரின் பழங்கள்-காய்கறிகளாகட்டும், சந்தௌலியின் கறுப்பு அரிசியாகட்டும், அனைத்து வகைப் பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரித்து வருகின்றது. நம்முடைய லத்தாக்கின் உலகப் பிரசித்தி பெற்ற ஆப்ரிகாட் பழங்கள் துபாயிலும் கிடைக்கின்றன, தமிழ்நாடு அனுப்பி வைத்த வாழைப்பழங்கள் அரேபியாவில் கிடைக்கிறது. இப்போது பெரிய விஷயம் என்னவென்றால், புதியபுதிய பொருட்கள், புதியபுதிய நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஹிமாச்சல், உத்தராகண்டில் விளையும் சிறுதானிய அனுப்பீடுகள் டென்மார்க் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டன. ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் விளையும் பங்கனபல்லி, சுவர்ணரேகா மாம்பழ ரகங்கள், தென் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டன. திரிபுராவில் விளையும் புத்தம்புதுப் பலாப்பழம், விமானம் வழியாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முதன்முறையாக நாகாலாந்தின் கிங் பெப்பர் என்ற மிளகு ரகம் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. இதே போன்று பாலியா கோதுமையின் முதல் அனுப்பீடு, குஜராத்திலிருந்து கென்யாவுக்கும், இலங்கைக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, இப்போது நீங்கள் பிற நாடுகளுக்குச் சென்றால், அங்கே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் முன்பை விட அதிகமாகக் காணக் கிடைக்கும்.

இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது, எத்தனை நீளமாக இந்தப் பட்டியல் இருக்கிறதோ, அத்தனை பெரியதாக நமது சக்தி உள்ளது இந்தியாவில் தயாரிப்போம் என்பதன் சக்தி, அத்தனை விசாலமானதாக இருக்கிறது பாரதத்தின் திறமைகள். பாரதத்தின் வல்லமைக்கான ஆதாரம் – நமது விவசாயிகள், நமது கைவினைஞர்கள், நமது நெசவாளிகள், நமது பொறியாளர்கள், நமது சிறுதொழில் புரிவோர், நமது சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை, மேலும் பல தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நபர்கள், இவர்கள் அனைவரும் தான் மெய்யான ஆற்றல். இவர்களின் உழைப்பாலேயே 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி என்ற இலக்கை எட்ட முடிந்திருக்கிறது, பாரத நாட்டவரின் இந்த வல்லமை, இப்போது உலகின் மூலை முடுக்கெங்கும் புதிய சந்தைகளைச் சென்றடைந்திருக்கிறது என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பாரதநாட்டவர் ஒவ்வொருவரும் உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்பவராக இருக்கும் போது, உள்ளூர்ப் பொருட்கள் உலகமயமானவையாக ஆவதற்கு அதிக காலம் பிடிக்காது. வாருங்கள், உள்ளூர் பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வோம், நமது உற்பத்திகளின் செல்வாக்கை மேலும் அதிகரிப்போம்.

குடிசைத் தொழில்

குடிசைத் தொழில் என்ற அளவிலும் கூட நமது சிறுதொழில்முனைவோரின் வெற்றி நமக்குள்ளே பெருமிதத்தை ஏற்படுத்துவதாக இருப்பதை மனதின் குரல் நேயர்கள் உண்ர்வார்கள். இன்று நமது சிறு தொழில்முனைவோர், கொள்முதலுக்கான அரசின் தளமான Government e-Market place அதாவது GeM வாயிலாக, பெரிய பங்காண்மை ஆற்றி வருகின்றார்கள். தொழில்நுட்பம் வாயிலாக பெரிய அளவிலான ஒளிவுமறைவற்ற அமைப்பு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஓராண்டில் ஜெம் வலைவாசல் வாயிலாக, அரசு ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை வாங்கியிருக்கிறது. தேசத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் கிட்டத்தட்ட ஒண்ணேகால் இலட்சம் சிறு தொழில்முனைவோர், சிறிய வியாபாரிகள் ஆகியோர் தங்களுடைய பொருட்களை அரசுக்கு நேரடியாக விற்பனை செய்திருக்கின்றார்கள். ஒரு காலத்தில், பெரிய நிறுவனங்கள் மட்டுமே அரசுக்குப் பொருட்களை விற்க முடிந்தது. ஆனால் இப்போது தேசம் மாறி வருகிறது, பழைய வழிமுறைகளும் மாறி வருகின்றன. இப்போது சிறிய கடைக்காரர்களும் கூட ஜெம் வலைவாசலில் அரசுக்குத் தங்களுடைய பொருட்களை விற்க முடியும், இது தானே புதிய பாரதம்!! இவர்கள் பெரிய கனவுகளைக் காண்பதோடு, யாருமே இதுவரை எட்டாத, அந்த இலக்கை எட்டும் துணிவையும் வெளிப்படுத்துகிறார்கள். இந்தத் துணிவின் துணை கொண்டு பாரதநாட்டவர் நாமனைவருமாக இணைந்து, தற்சார்பு பாரதத்தின் கனவைக் கண்டிப்பாக மெய்யாக்குவோம் என்று கூறினார். 

Tags:    

Similar News