காலி பாட்டில்களை எடுத்து அகற்றிய...தூய்மை இந்தியா நாயகன் பிரதமர் மோடி!
டெல்லியில் சுரங்கப்பாதை ஆய்வுக்கு சென்ற பிரதமர் மோடி, அதிகாரிகளை எதிர்பாராமல் காலி பாட்டில்களை எடுத்து, தானே அப்புறப்படுத்தி தூய்மை இந்தியா நாயகன் என பெருமை பெற்றுள்ளார்.
டிஜிட்டல் இந்தியாவின் நாயகன் பிரதமர் மோடி, காகிதமில்லா பணப்பரிமாற்ற முறையை கொண்டு வந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். தற்போது, சுரங்கப்பாதை ஆய்வில் பங்கேற்ற மோடி தரையில் கிடந்த காலி பாட்டில்களை தன் கைகளால் எடுத்து, குப்பை தொட்டியில் போட்டது, அவரை தூய்மை இந்தியாவின் பிதாமகனாக பிரமித்து பார்க்க வைத்துள்ளது.
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ல் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தில், இதுவரை 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டன. இதையடுத்து, தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் மூலம் குப்பைகள் இல்லாத நகரங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் மத்திய அரசு ஸ்வச் பாரத் என்னும் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தியது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்படும் என உறுதியளித்தது. அதன்படி, தற்போது 90 சதவீதம் இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி கிடைத்துள்ளது. ஆனால் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ம் ஆண்டு வரை 40 சதவீதம் இந்தியர்களுக்குத் தான் கழிப்பறை வசதி இருந்தது
கடந்த 2018 நவம்பர் நிலவரப்படி இந்தியாவில் 96.25 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதி இருந்ததாகவும், அக்டோபர் 2014-ல் 38.74 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதிகள் இருந்தது என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதன்படி, பா.ஜ அரசு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை விட அதிக அளவில் கழிப்பறைகளை கட்டியுள்ளது தெரியவருகிறது.
அதே சமயம் ஊரக பகுதிகளில் நடத்திய ஆய்வு நவம்பர் 2017 - மார்ச் 2018 இடையே மேற்கொள்ளப்பட்டது. இதில் 77 சதவீதம் ஊரக பகுதிகளில் கழிவறை வசதியும் அதில் 93.4 சதவீதம் மக்கள் தொடர்ந்து கழிவறையை பயன்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டது.
நாடு முழுவதும் 6,136 கிராமங்களில் 92 ஆயிரம் வீடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. நாட்டில் 27 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்கள் தற்போது திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறையில் இருந்து விடுபட்டுள்ளன என தூய்மை இந்தியா மிஷனின் ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது. முன்னதாக 2015 - 2016ல் இந்தியாவில் சிக்கிம் மாநிலம் மட்டுமே திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லா மாநிலமாக அறிவிக்கப்பட்டு இருந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வச் பாரத் திட்டத்தை தொடங்கி வைத்ததன் மூலம் தூய்மை இந்தியா நாயகனாக பிரதமர் மோடி அறியப்படுகிறார். இந்நிலையில் தான், டில்லியில் புதிதாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை திறந்து வைத்து ஆய்வு செய்த பிரதமர் மோடி அங்கு ஓரமாக கிடந்த தண்ணீர் பாட்டில்களை தன் கைகளால் எடுத்து அப்புறப்படுத்தியது ஆச்சரியப்படுத்தியது. டில்லியில் பிரகதி மைதான மறுவளர்ச்சி திட்டப்படி ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக மத்திய அரசு ஒதுக்கிய 920 கோடியில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன. இதற்கான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, பிரதான சுரங்கப்பாதை மற்றும் 6 சுரங்கப்பாதைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து மோடி, சுரங்கப்பாதையை நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிதறி கிடந்த குப்பைகள் மற்றும் பாட்டில்களை தன் கைகளால் எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டார். இதனை பார்த்து அதிர்ந்தும் திகைத்தும் போன அதிகாரிகள், அங்கு காலி பாட்டில்கள் கிடந்ததை தான் பார்த்தும் அகற்ற முன் வரவில்லையே என மனதுக்குள் வருந்தினர், அதே சமயத்தில், பிரதமர் மோடி, தண்ணீர் பாட்டில்களை அள்ளி குப்பை தொட்டியில் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி இந்திய மக்கள் மத்தியில் அவருடைய செல்வாக்கை பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது என்பதே உண்மை..!