காங்கிரஸ் தலைவர் தேர்தல்: காரிய கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல்
காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலை அக்டோபர் 17ந்தேதி நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.;
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் இன்று பிற்பகல் மூன்றரை மணிக்கு டெல்லியில் நடைபெற்றது. மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி காணொலி வாயிலாக இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
அவருடன் சென்றுள்ள ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் காணொலி மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, மல்லிகார்ஜூன் கார்க்கே, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், பி.சிதம்பரம், அசோக் கெலாட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செப்டம்பர் 7ந் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி பாத யாத்திரை தொடங்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் சில வாரங்கள் தாமதமாகலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறுகையில், அக்டோபர் 17ந்தேதி கட்சித் தலைவர் தேர்தலை நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
கட்சித் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 22ந் தேதி வெளியிடப்படும், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ந் தேதி வரை நடைபெறும் என்று கூறினார்.
அக்டோபர் 17ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19ந் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.