டிப்பர் லாரி- கார் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் காரின் டயர் வெடித்து டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.;
உத்தரபிரதேசத்தில் காரின் டயர் வெடித்து டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
பரேலி - நைனிடால் நெடுஞ்சாலை, உத்தரப் பிரதேசத்தின் போஜிபுரா காவல் நிலையப் பகுதியில் நேற்று இரவு காரின் டயர் வெடித்ததால், உத்தரகாண்டில் இருந்து வந்த டிப்பர் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தை தொடர்ந்து இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரியும்போது பெரும் வெடிப்புச் சத்தம் ஏற்பட்டது. அருகில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பொலிசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், காரின் கதவுகள் உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததால், காரில் சிக்கியவர்கள் உயிருடன் எரிந்தனர். டிப்பர் வண்டியில் இருந்த இருவர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் சிறப்புக் காவல் கண்காணிப்பாளர் (SSP) காரில் இருந்த எட்டு பேரும் இறந்ததை உறுதிப்படுத்தினார். இந்த வாகனம் பரேலியில் இருந்து பஹேரி நோக்கிச் சென்றுள்ளது. போலீசார் தீயில் கருகி உயிரிழந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் இருப்பதாக எஸ்.எஸ்.பி தெரிவித்தார்.