சட்டவிரோத சுரங்க ஊழல்: 27 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பீகாரில் ரூ.250 கோடி மதிப்பிலான சட்டவிரோத சுரங்க ஊழலை கண்டுபிடித்த அமலாக்கத்துறை பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் சோதனை நடத்தியது.
பீகாரில் இரண்டு தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ரூ.250 கோடி சட்டவிரோத சுரங்க ஊழலை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 27 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.1.5 கோடி ரொக்கம் மற்றும் ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறைகைப்பற்றியுள்ளது.
பாட்னாவில் உள்ள பிராட்சன் கமாடிடீஸ் பிரைவேட் லிமிடெட், ஆதித்யா மல்டிகாம் பிரைவேட் லிமிடெட், அதன் இயக்குநர்கள் மற்றும் ஆடிட்டர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தன்பாத், ஹசாரிபாக் (ஜார்கண்ட்) மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தியது. அதிகாரிகள் சோதனையின் போது 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலையான வைப்புகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 60 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர்.
நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்களுக்கு எதிராக பீகார் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட பல்வேறு எஃப்ஐஆர்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தொடங்கியது. ப்ராட்சன் கமாடிட்டிஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆதித்யா மல்டிகாம் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது பீகார் சுரங்கத் துறையின் புகார்களின் அடிப்படையில் எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன. பீகார் சுரங்க ஆணையத்தால், அரசு கருவூலத்திற்கு 250 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
“தேடல் நடவடிக்கையில் பணம், வாங்கிய சொத்துக்களின் விற்பனைப் பத்திரங்கள், நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்கள் பெயரில் உள்ள எஃப்.டி.ஆர் போன்ற ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேடுதலின் போது கண்டுபிடிக்கப்பட்ட பிற ஆவணங்கள்மற்றும் டிஜிட்டல் பொருட்கள் ஆய்வுக்காக கைப்பற்றப்பட்டுள்ளன” என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.