இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் தலைமை இயக்குனராக பதவி ஏற்ற தமிழர்

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் S. ராஜு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பசுவந்தனை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

Update: 2022-04-01 04:19 GMT

இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் தலைமை இயக்குனர் S. ராஜு

இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் தலைமை இயக்குனராக (Director General) தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் S. ராஜு இன்று முதல் பதவியில் அமர்ந்தார். இந்திய புவியில் ஆய்வுத்துறையின் கூடுதல் தலைமை இயக்குனராக 2018 முதல் பணியாற்றிவரும் இவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பசுவந்தனை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னை மாநிலக் கல்லூரியில் புவியியலில் முதுகலைப் பட்டமும், லக்னோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்ற இவர், 1988-இல் இந்திய புவியியல் ஆய்வுத்துறையில் பணியில் சேர்ந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து திறம்பட செயலாற்றி வருகிறார்.

முனைவர் S. ராஜு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில், துணைத் தலைமை இயக்குனராகப் பணியாற்றிய காலத்தில் (2015-2018), திருவக்கரை, விழுப்புரம் மாவட்டம் மற்றும் சாத்தனூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதைப்படிவ மரப் பூங்காக்களை தனது பிரத்தியேக கவனத்தில் எடுத்துக் கொண்டு சீரமைத்து மேம்படுத்தினார். தமிழ்நாட்டின் சென்னை மாநிலப் பிரிவின் புதிய அலுவலக மற்றும் ஆய்வகக் கட்டிடத்தை நிர்மாணித்ததில் முக்கியப் பங்காற்றியதாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News