10 மாதங்களில் 1,700க்கும் மேற்பட்ட அபாயகரமான சரக்குகளை அழித்தது சுங்கத்துறை

அபாயகரமான சரக்குகளை பாதுகாப்பாக அழிக்கும் நடைமுறையை தொடர்ந்து கண்காணித்து, விரைவுபடுத்த மத்திய நிதியமைச்சர் உத்தரவு.

Update: 2021-11-09 10:31 GMT

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 1,700க்கும் மேற்பட்ட அபாயகரமான சரக்குகளை அழிக்கும் பணியை சுங்கத்துறை மேற்கொண்டது.

சுங்கத்துறை பறிமுதல் செய்த அபாயகரமான இறக்குமதி பொருட்களை பாதுகாப்பாக அழிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மத்திய நிதி மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட ரசாயனங்கள், எலக்ட்ரானிக் கழிவுகளை சுங்கத்துறை தொடர்ந்து அழித்து வருகிறது. இதற்காக சுங்கத்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற அபாயகரமான சரக்குகள் தொடர்பான வழக்குகள் முடிய கால தாமதம் ஆவதால், அவற்றை அழிப்பதற்கு அதிக காலம் ஆகிறது. இதனால் அபாயகரமான சரக்குகளை அழிக்கும் நடைமுறையை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் எளிமையாக்கியது. 1962ம் ஆண்டு சுங்கச் சட்டம் 110வது பிரிவின் 1ஏ உட்பிரிவுப்படி, இந்த அபாயகரமான பொருட்களை வழக்குககளின் தீர்ப்புக்கு முன்பே அழிக்க முடியும். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 1,700க்கும் மேற்பட்ட சரக்குகளை சுங்கத்துறை அழித்தது. அபாயகரமான சரக்குகளை பாதுகாப்பாக அழிக்கும் நடைமுறையை தொடர்ந்து கண்காணித்து, விரைவுபடுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இப்பணியில் ஈடுபட்டுள்ள சுங்கத்துறை பிரிவுகள் மற்றும் மாநில அரசுகள், நிலுவையில் உள்ள அபாயகரமான பொருட்களை 90 நாட்களுக்குள் அழிப்பதை உறுதி செய்கின்றன.

Tags:    

Similar News