சொகுசு விடுதியில் பதுங்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாப்பு தர ஆளுனர் அதிரடி நடவடிக்கை

சொகுசு விடுதியில் பதுங்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மும்பை மாநகர காவல்துறை ஆணையருக்கு மகாராஷ்டிரா ஆளுனர் பகத் சிங் கோஷியாரி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2022-06-26 12:43 GMT

மகாராஷ்டிரா ஆளுனர் பகத் சிங் கோஷியாரி.

மகாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சிவசேனா மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். 40 சிவசேனா எம்.எல்.ஏ.,க்களும், ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் உடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் அசாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். இதனால், மகாராஷ்டிராவில் கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. சமாதான பேச்சு நடத்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தும் பலனில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு விலக்கி கொண்டது.

இந்நிலையில், ரமேஷ் போனரே, மங்கேஷ் குடால்கர் உள்ளிட்ட 15 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில டி.ஜி.பி மற்றும் மும்பை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு ஆளுனர் பகத் சிங் கோஷியாரி அறிவுறுத்தியுள்ளார். 

Tags:    

Similar News