ஒவ்வொரு எம்பி.,யும் ஒரு கிராமத்தை தத்தெடுக்கணும் தெரியுமா?

சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (Sansad Adarsh Gram Yojana-SAGY) என்ற கிராம தத்தெடுப்பு திட்டம் மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டது.

Update: 2022-03-18 12:02 GMT

பைல் படம்.

சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (Sansad Adarsh Gram Yojana-SAGY) என்ற கிராம தத்தெடுப்பு திட்டம் மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டது. இதில் சமூக மேம்பாடு, கலாச்சார மேம்பாடு மற்றும் கிராம சமூகத்தின் மீது மக்களிடையே ஊக்கத்தை பரப்புதல் ஆகியவை அடங்கும். இத்திட்டம் கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.

இதன் படி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தலா ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் பெண்கள், முதியோர், குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.

நிதிகள்:

இந்திரா ஆவாஸ் யோஜனா, பிரதம மந்திரி கிராம தத்தெடுப்பு திட்டம் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கான மானிய நிதி போன்ற தற்போதைய திட்டங்களின் நிதிகள், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (MPLADS), கிராம பஞ்சாயத்தின் சொந்த வருவாய், மத்திய மற்றும் மாநில நிதி ஆணைய மானியங்கள் மற்றும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதிகள்.

கிராம மக்கள் மற்றவர்களுக்கு சிறந்த மாதிரிகளாக மாறச் செய்வதற்காக, வெறும் உள்கட்டமைப்பு உருவாக்குவதையும் தாண்டி, கிராம மக்களிலும் குறிப்பிட்ட நற்பண்பு மதிப்பீடுகளை புகட்டுவது கிராம தத்தெடுப்பு திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ், நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசி ஜெயப்பூர் கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து  நாகேபூர், கக்ராஹியா, டோமாரி, பூரே பாரியார்பூர் மற்றும் பரம்பூர் ஆகிய  கிராமங்களையும் தத்தெடுத்தார்.

சோனியா காந்தி உத்தரபிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான ரேபரேலியில் உள்ள உத்வா கிராமத்தையும், ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் உள்ள தீஹ் கிராமத்தையும் தத்தெடுத்துள்ளனர்.

திட்ட முதற் கட்டத்தின் (2014-16) கீழ், 543 மக்களவை எம்.பி.க்களில் கிட்டத்தட்ட 500 பேரும், ராஜ்யசபா எம்.பி.க்கள் 253 பேரில் 203 பேரும் கிராமங்களை தத்தெடுத்தனர். 2-வது கட்டத்தில் (2016-18), கிராமங்களை தத்தெடுக்கும் லோக்சபா எம்.பி.,க்கள் எண்ணிக்கை 326 ஆகவும், ராஜ்யசபா எம்.பி.க்கள் 121 ஆகவும் குறைந்துள்ளது. கட்டம் 3ல் (2017–19) எண்ணிக்கை மேலும் குறைந்தது. பிப்ரவரி 2018 நிலவரப்படி, 97 மக்களவை எம்.பி.க்கள் மற்றும் 27 ராஜ்யசபா எம்.பி.க்கள் மட்டுமே கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். 

மேலும் விபரங்களுக்கு https://saanjhi.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

Tags:    

Similar News