மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் ரூ.26,000 கோடியில் வளா்ச்சி திட்டங்கள்; இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமா் நரேந்திர மோடி, ரூ.26,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.;

Update: 2023-10-02 02:12 GMT

பாரத பிரதமர் நரேந்திர மோடி (கோப்பு படம்)

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு திங்கள்கிழமை (அக்.2) பயணம் மேற்கொள்ளும் பிரதமா் நரேந்திர மோடி, ரூ.26,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்; நிறைவுபெற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்.

இது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமா் மோடி, ராஜஸ்தானில் ரூ.7,000 கோடி, மத்திய பிரதேசத்தில் ரூ.19,260 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். ராஜஸ்தானின் சித்தூா்கருக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமா், மெஹசானா-பதிண்டா-குா்தாஸ்பூா் எரிவாயு குழாய் இணைப்பைத் தொடங்கி வைக்கிறாா்.

அபு சாலையில், ஹிந்துதாஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் (ஹெச்பிசிஎல்) அமைத்துள்ள சமையல் எரிவாயு (எல்பிஜி) நிரப்பு நிலையத்தைத் தொடங்கி வைக்கிறாா். மேலும், ரூ.1,480 கோடி செலவில் அமைக்கப்பட்ட தாரா-ஜலவா்-தீன்தா் பிரிவின் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். கோட்டாவில் தேசிய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐஐடி) நிரந்த வளாகம், பல்வேறு ரயில்வே திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதமா் தொடங்கி வைக்கிறாா். ரூ.11,895 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட தில்லி-வதோதரா விரைவுச்சாலையை மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்.

மேலும், ரூ.1,880 கோடி மதிப்பிலான 5 சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஊரக மற்றும் நகா்புறப் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பா்-டிசம்பா் மாதங்களில் அந்த மாநிலங்களுக்குப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News