கோவிட் பீதி: 3 ஆண்டுகளாக வீட்டில் அடைந்து கிடந்தவர் மீட்பு
மனைவிக்கு மனநலம் சரியில்லை என பெண்ணின் கணவர் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து தாயும் குழந்தையும் மீட்கப்பட்டனர்.
கோவிட்-19க்கு பயந்து, ஒரு பெண் தனது 10 வயது மகனுடன் குருகிராம் வீட்டிற்குள் மூன்று ஆண்டுகளாக தன்னைப் பூட்டிக் கொண்டார். பெண்ணின் கணவன், தன்னைத் துரத்தியடித்ததாக அளித்த புகாரின் பேரில், தாயையும், குழந்தையையும் காவல்துறையினர் மீட்டனர்.
35 வயதான பெண்ணின் கணவர், அவர் மனநிலை சரியில்லாதவர் என்று கூறினார். பூட்டிய வீட்டில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்ட பின்னர், குழந்தை மற்றும் தாய் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாரிகள் குழந்தையை வெளியேற்ற முயன்றால் குழந்தையை கொன்று விடுவதாக பெண் மிரட்டியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குழந்தைகள் நலக் குழுவின் உதவியுடன் அவர்களை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர்.
அறைக்குள் குப்பை குவிந்து கிடப்பதை கண்டு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் திகைத்தனர்.அறையை சுற்றி மூன்று ஆண்டுகளாக குப்பை இருந்தது என்று குழந்தைகள் நல குழு அதிகாரி ஒருவர் கூறினார்
அந்த பெண்ணின் கணவர் இதற்கு முன்பே ஒருமுறை புகார் அளித்தார், ஆனால் அது குடும்ப விவகாரம் என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், மாவட்ட நிர்வாகம் நடத்திய சோதனையில் தாய் மற்றும் அவரது குழந்தை விடுவிக்கப்பட்டது.
முதல் கோவிட்-19 அலையின் போது, குடும்பம் முழுவதும் வீட்டுக்குள்ளேயே இருந்தது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் இரண்டாவது அலைக்கு முன்னதாக, அந்தப் பெண் தனது கணவரின் வீட்டிற்குள் நுழைவதைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது. கணவர் வேலைக்காக வெளியூர் சென்றிருந்தபோது வீட்டை பூட்டிவிட்டு சென்றார். இதையடுத்து, கணவர் சக்கர்பூரில் மற்றொரு அறையை வாடகைக்கு எடுத்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
"முதலில், காவல்துறையினர் இதை குடும்ப விவகாரம் என்று நினைத்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு, மன உளைச்சலுக்கு ஆளான கணவர் மீண்டும் காவல்நிலையத்தில் முறையிட்டார், மேலும் சக்கர்பூர் காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்ட ஒரு காவல் அதிகாரி, அவர்களை மீட்க மாவட்ட நிர்வாகத்தின் உதவியைப் பெற்றார்" என்று அங்கு குடியிருப்பவர் ஒருவர் கூறினார்.