இந்தியாவில் கொரோனா 4-வது அலை இன்னும் வரவில்லை: ஐசிஎம்ஆர் இயக்குநர் தகவல்
இந்தியாவில் கொரோனாவின் 4-வது அலை இன்னும் உருவாகவில்லை, சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகரித்துள்ளது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் டாக்டர் சமிரன் பாண்டா
இந்தியாவில் கொரோனாவின் 4-வது அலை இன்னும் உருவாகவில்லை, சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகரித்துள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று ஆயிரத்துக்கும் கீழ் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை தொட்டுள்ளது. டெல்லி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.இதனால் 4-வது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குநர் டாக்டர் சமிரன் பாண்டா நேற்று கூறியதாவது: "தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. எனினும், இது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே இது அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பரவலாக பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை கொரோனா 4-வது அலைக்கான அறிகுறி ஏற்படவில்லை.
கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவோரில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம்அதிகரித்து வருவது உண்மைதான். ஆனால், சோதனை செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம். உதாரணமாக டெல்லியில் கொரோனா சோதனையை அதிகரித்த பிறகு, தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7-லிருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.