6 பேர் விடுதலைக்கு எதிராக காங்கிரஸ் தரப்பிலும் மனு

ராஜீவ் கொலைவழக்கில் 6 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் மனு தாக்கல் செய்துள்ளது.

Update: 2022-11-21 09:28 GMT

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் விடுதலையான நளினி

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து 41 பேரை கைது செய்தது. சிறப்பு தடா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருத்த போதே 15 பேர் இறந்தனர். மீதமுள்ள 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து 1998-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கவர்னர் உத்தரவிட்டார். தொடர்ந்து எஞ்சிய 3 பேரின் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து 7 பேரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரை விடுதலை செய்து கடந்த மே மாதம் உத்தரவிட்டது. பேரறிவாளன் விடுதலையை அடிப்படையாக வைத்து எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியும், ரவிச்சந்திரனும் முறையிட்டனர்.

அதை விசாரித்த நீதிமன்றம் தனது தீர்ப்பில், 'பேரறிவாளனை உச்சநீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என கடந்த ஜூலை 17-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. தெரிவித்தது.


இந்த தீர்ப்புக்கு எதிராக இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களில் தங்களையும் இணைக்க கோரி மற்ற 4 பேர் சார்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

6 பேரில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்கனவே பரோலில் இருந்தனர். ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 2 பேர் புழல் சிறையிலும், சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 11-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் 6 பேரையும் விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பு அளித்தனா.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், பேரறிவாளனை விடுவித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இந்த 6 பேருக்கும் பொருந்தும். மேலும் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை இந்த மனுதாரர்கள் அனுபவித்து விட்டனர். எனவே, மனுதாரர்களை வேறொரு ஏதேனும் வழக்கில் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லாதபட்சத்தில் உடனடியாக விடுவிக்க உத்தரவிடுகிறோம் என தெரிவித்தனர்.

இந்த தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை தவிர தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீர்ப்பை வரவேற்றன.

உச்சநீதிமன்றம் தீர்ப்பையடுத்து அவர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கிடையே 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

6 பேர் மேல்முறையீடு விவகாரத்தில் மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் கேட்கவில்லை. இந்த வழக்கில் இடையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கவில்லை. குறிப்பாக விடுவிக்கப்பட்ட 6 பேரில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்களாக இருந்தபோதும் மத்திய அரசின் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கவில்லை. இயற்கை நீதி கொள்கைகளை கருத்தில் கொள்ளாமல் இவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது தவறானதாகும்.

பேரறிவாளன் உத்தரவை மட்டுமே கொண்டு 6 பேரையும் விடுதலை செய்தது தவறு. பொது ஒழுங்கு, அமைதி, நாட்டின் குற்ற நீதிமுறை ஆகியவற்றில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு தொடர்பான இந்த மனுவில் மத்திய அரசின் வாதத்தை கேட்டிருக்க வேண்டும். வெளிநாட்டவர்கள் விடுதலை தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சாசனம் 7-வது அட்டவணையின்படி வெளிநாட்டவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது. மேற்கண்ட வழக்கின் உண்மைத்தன்மையை ஆராயாமல் 6 பேரையும் விடுவித்த உத்தரவு மறுஆய்வு செய்ய தகுதியுடையது. எனவே நவம்பர் 11-ந்தேதி பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது 

Tags:    

Similar News