திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது குழந்தையின் சித்தப்பா ஆட்டோவில் அழைத்துச் சென்றது தெரியவந்தது

Update: 2023-10-03 07:13 GMT

திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த மீனா, சந்திரசேகர் தம்பதியினர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்திருந்தார். தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் திருமலையில் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்தனர் 

நேற்று இரவு தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் சென்னை செல்வதற்காக பேருந்து நிலையம் வந்தனர். சென்னை செல்ல பேருந்து இல்லாத காரணத்தால் பேருந்து நிலையத்தில் களைப்பில் தூங்கியுள்ளர். அதிகாலை 2 மணிக்கு சந்திரசேகர், திடீரென விழித்து பார்க்கையில் அருகில் படுத்து கொண்டிருந்த சந்திரசேகரின் 2 வயது மகன் அருள்முருகனை காணவில்லை. இதனால் பதறிய அவர்கள் பேருந்து நிலையம் முழுவதும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இதுகுறித்து திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் சோதனை செய்ததில் மர்ம நபர் ஒருவர் சிறுவனை தூக்கி கொண்டு நடந்து செல்வது பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் கடத்தல் நபர் குறித்து விசாரணை செய்து வந்தனர். அப்போது குழந்தையின் சித்தப்பா ஆட்டோவில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. காவல்துறையினர் தேடுவதை அறிந்த குழந்தையின் சித்தப்பா சுதாகர், குழந்தையை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

குழந்தையை கடத்தியது சித்தப்பாவா அல்லது வேறு யாராவதா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News