ஒமிக்ரான் பரவல்: 50% ஊழியர்களுடன் இனி மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கும்
இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;
இந்தியாவில் கொரோனா ஒமிக்ரான் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, பல்வேறு மாநிலங்களும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. எனினும், ஒமிக்ரான் பரவல் கட்டுக்குள் இல்லை.
இந்நிலையில், மத்திய அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, செயலகங்கள் நிலைக்கு கீழ் உள்ள அலுவலகங்களில், சுழற்சி முறையில் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும்; கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து பணி புரிய வேண்டும். தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்து அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அத்துடன், மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணி வருகைக்கான 'பயோ மெட்ரிக்' பதிவு நிறுத்தி வைக்கப்படுகிறது. மத்திய பிரதமர் அலுவலகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், இதை தெரிவித்துள்ளார்.
மறுஉத்தரவு வரும் வரை இது தொடரும் என்றும், மத்திய அரசு ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.