அசாம் வெள்ளப்பெருக்கு சவாலை சமாளிக்க மத்திய அரசு உதவும்: பிரதமர் மோடி உறுதி..!
அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு சவாலை சமாளிக்க அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என, பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அசாமில் பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி, பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், அசாமில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்தது.இந்நிலையில், அசாம் வெள்ளப்பெருக்கை சமாளிக்க அனைத்து உதவிகளையும் அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கடந்த சில நாட்களாக அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அசாமின் நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேலும் இந்த சவாலை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்ய மாநில அரசுடன், மத்திய அரசு நெருக்கமாக செயல்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.