வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தர்களிடம் காலி சமையல் சிலிண்டரை மாற்றும் திட்டம் அறிமுகம்
சமையல் எரிவாயு பயன்படுத்துவோர் மற்ற விநியோகஸ்தர்களிடமும் எரிவாயு பெற்றுக் கொள்ளும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சமையல் எரிவாயு பயன்படுத்துவோர் தாங்கள் பதிவு செய்த விநியோகஸ்தர்களை தவிர மற்ற விநியோகஸ்தர்களிடமும் எரிவாயு பெற்றுக் கொள்ளும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உள்ள எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதற்காக தங்கள் வசதிகளை மேம்படுத்துகின்றன. கொரோனா பரவல் காரணமாக நேரடி தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாடு மூலம் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் தளங்கள் மூலம் தங்கள் எல்பிஜி மறு நிரப்பல்களுக்கு முன்பதிவு செய்து பணம் செலுத்த உதவுகின்றது.
இதை தவிர வாடிக்கையாளர்கள் தங்கள் எல்பிஜி மறு நிரப்பல்களை உமாங் செயலி பயன்பாடு மற்றும் பாரத் பில் பே சிஸ்டம் செயலி மூலமாகவும் எல்பிஜி மறு நிரப்பல்களை பதிவு செய்யலாம். தற்போது மத்திய அரசு சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னதாக தாங்கள் பதிவு செய்த எரிவாயு விநியோகஸ்தர்களிடம் இருந்து மட்டுமே கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து பெற முடியும். ஆனால் இனி, வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தர்களிடம் இருந்து கேஸ் முன்பதிவு செய்து பெறுவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்த திட்டம் முதல் கட்டமாக கோவை, சண்டிகர், குர்கான், புனே மற்றும் ராஞ்சி ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், மக்களிடம் இந்த திட்டத்திற்கான வரவேற்பை பொறுத்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செயல்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.