பீரங்கி குண்டு முழங்க ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உடல் தகனம்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணமடைந்த முப்படை தலைமைத்தளபதி பிபின் ராவத், அவரது மனைவி ஆகியோரின் உடல்கள், டெல்லியில் முழு ராணுவ மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.

Update: 2021-12-10 12:30 GMT
காலஞ்சென்ற முப்படைத் தலைமைத்தளபதி பிபின் ராவத் உடலுக்கு, அவரது மகள் தீ மூட்டினார். 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று முன்தினம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவருடைய மனைவி, 11 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம், நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராவத் உள்பட, இறந்தவர்களின் உடல்கள் நேற்று மாலை டெல்லி கொண்டு செல்லப்பட்டன. டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. 

இன்று காலை, டெல்லியில் உள்ள வீட்டிற்கு பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, மத்திய அமைச்சர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பா.ஜ.க. தலைவர் நட்டா, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தி.மு.க எம்.பி.க்கள் கனிமொழி, ராசா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி, கடற்படை தளபதி ஹரிகுமார் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா உள்ளிட்டோர், பிபின் ராவத்தின் உடலுக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தாய், தந்தை இருவரின் உடல்களுக்கும் இறுதிச் சடங்கு நடத்தி பிபின் ராவத் மகள். 

இதனைத்தொடர்ந்து, பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதி ஊர்வலம், காமராஜர் மார்க் பகுதியில் தொடங்கியது. டெல்லி கன்டோன் மென்ட் மயானத்திற்கு , ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பிபின் ராவத் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி அகற்றி, அவரது மகளிடம் முறைப்படி ராணுவத்தினர் ஒப்படைத்தனர்.

பீரங்கி குண்டுகள் முழங்க, பிபின் ராவத்திற்கு பிரியா விடை கொடுக்கப்பட்டது. 

பின்னர் தகன மேடையில் பிபின் ராவத் உடலுக்கு மற்றும் தாய் மதுலிகாவிற்கும் அவரது மகள்கள் இறுதி சடங்குகளை செய்தனர். தொடர்ந்து ஒரே தகன மேடையில் பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் வைக்கப்பட்டன. அதன் பின்னர் பிபின் ராவத், அவரது மனைவி உடலுக்கு மகள்கள் தீ மூட்டினர். அப்போது முழு ராணுவ மரியாதையுடன் 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்கி, வீரத்திருமகனுக்கு விடை கொடுத்தனர்.

Tags:    

Similar News