முன்னாள் மத்திய அரசு உயர் அதிகாரி வீடுகளில் சிபிஐ சோதனை: ரொக்கம் பறிமுதல்
முன்னாள் மத்திய அரசு உயர் அதிகாரி வீடுகளில் நடைபெற்ற சிபிஐ சோதனையில் ஈடுபட்டது.;
தொழில் மேம்பாட்டுத் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறையின் (DPIIT) முன்னாள் செயலாளர் ரமேஷ் அபிஷேக் மற்றும் அவரது மகள் ஆகியோர் பதவியில் இருந்தபோது லஞ்சம் பெற்றதாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான ரமேஷ் அபிஷேக் மீது பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகை லஞ்சமாகப் பெற்றதாக ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் குற்றச் சதிப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற முக்கிய அரசுத் திட்டங்களின் ஒரு பகுதியாக திகழ்ந்த அபிஷேக், பதவியில் இருந்தபோது இந்த நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்துவிட்டு லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
ரமேஷ் அபிஷேக்கின் மகள் வனேசா அக்ரவாலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். லோக்பால் அமைப்பிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 2023 அன்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணையின் முடிவிலேயே தற்போது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
"ரமேஷ் அபிஷேக் தொழில் மேம்பாட்டுத் துறைச் செயலாளராகவோ அல்லது முன்னோடி சந்தை ஆணையத்தின் (FMC) தலைவராகவோ இருந்தபோது, பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் பணத்தை வைத்து தில்லியின் கிரேட்டர் கைலாஷ்-II பகுதியில் உள்ள E-72 என்ற சொத்தில் முதலீடு செய்ததாக தெரிய வந்துள்ளது. " என்று சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது .
பணி ஓய்வு பெற்ற பிறகு, ரமேஷ் அபிஷேக் Paytm Payments Bank Ltd இல் சுயேச்சை இயக்குநராக சேர்ந்தார். சமீபகாலமாக, இந்த Paytm நிறுவனம் ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) கண்காணிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.