காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்த கர்நாடகா
காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 5000 கன அடி நீரை நேற்று திரந்து விட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, இன்று காலை டெல்லியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
ஏற்கெனவே காவிரி விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை நாளை(செப். 21) உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மனு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.