காளஹஸ்தி கோயிலுக்குள் செல்போன் கொண்டு சென்றால் ரூ. 5 ஆயிரம் அபராதம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயிலுக்குள் செல்போனை எடுத்து செல்வோருக்கு ரூ. 5000 அபராதம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தியில் புகழ் பெற்ற சிவன் கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருகின்றனர்.
இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன்களை கோவிலுக்குள் எடுத்து செல்வதாகவும், கோயில் வளாகங்களில் செல்போனை பயன்படுத்தி போட்டோ, வீடியோ என எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இது தவிர கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செல்போன் எடுத்து சென்று பேசி வருகின்றனர் எனவும் இதனால் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கோயிலுக்குள் வருவோர் செல்போனை எடுத்து வந்தால் ரூ.5000 அபராதம் என்றும் அபராதம் கட்ட தவறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.