பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு: விழாக்கோலம் பூண்டது ஐதராபாத்..!
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றனர்.;
மகாராஷ்டிரா மாநிலத்தை கைப்பற்றிய வெற்றிக்களிப்பில் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா.
தெலுங்கானா மாநிலம், அடுத்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், ராஷ்டிர சமிதியிடம் இருந்து ஆட்சியைப் பறிக்க இப்போது முதலே வியூகங்களை பா.ஜ.க வகுத்து வருகிறது. அதனால் இந்த முறை, தேசிய செயற்குழு கூட்டத்தை ஐதராபாத்தில் பா.ஜ.க கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, நேற்று தனி விமானத்தில் ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தார்.
இதையடுத்து பிரதமர் மோடியை தெலுங்கானா மாநில ஆளுனர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர். ஆனால், இந்த வரவேற்பு நிகழ்ச்சியை அம் மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தலைவருமான சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். திட்டமிட்டபடி, பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் மாதாப்பூர் சர்வதேச கன்வென்சன் சென்டரில் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவந்த பிரதமர் மோடியை கட்சித்தலைவர் ஜே.பி.நட்டா வரவேற்றார். இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சக்திவாய்ந்த ஐதராபாத் நகருக்கு வந்திறங்கி இருக்கிறேன். இந்த கூட்டத்தில், கட்சியை மேலும் பலப்படுத்தும் வகையில் நாங்கள் பல்வேறு பரந்த விஷயங்கள் குறித்து விவாதிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
செயற்குழு கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, செயற்குழு கூட்டத்தை குத்து விளக்கேற்றி பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வை முன்னிட்டு, ஐதராபாத் நகரம் விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் வருகை காரணமாக வரலாறு காணாத வகையில் ஐதராபாத் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.