உபியின் 37 வருட வரலாற்றை மாற்றிய பாஜக

உபியில் 1985க்கு பிறகு எந்த கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததே கிடையாது. அதனை பாஜக மாற்றியுள்ளது;

Update: 2022-03-10 06:15 GMT

உத்தர பிரதேச அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கிறார் யோகி ஆதித்யநாத். அங்கு சாத்தியமே இல்லை என்று கூறப்பட்டு வந்த ஒரு விஷயத்தை யோகி ஆதித்யநாத் சாத்தியப்படுத்தி உள்ளார்.

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டு இருக்கிறது. 403 இடங்களில் பாஜக 256 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

சமாஜ்வாதி கட்சியோ 116 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

உத்தர பிரதேச வரலாற்றை எடுத்துக்கொண்டால் அங்கு 1985க்கு பிறகு எந்த கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறை மீண்டும் ஆட்சிக்கு வந்ததே கிடையாது. 1985க்கு பின் சோனியா, வாஜ்பாய், அத்வானி, முலாயம் சிங் யாதவ், மாயாவதி என்ற எந்த பெரும் தலைவர்களாலும் தங்கள் கட்சியை மீண்டும் வெற்றிபெற வைக்க முடியவில்லை. உத்தர பிரதேசத்தில் பாஜக 1977ல்தான் முதல்முறை வென்றது. பின்னர் மீண்டும் 1991ல்தான் பாஜக அங்கு மீண்டும் வென்றது. இடைப்பட்ட காலத்தில் 1982 முதல் 1989 வரை காங்கிரஸ் இரண்டு முறை தொடர்ந்து அங்கு ஆட்சி அமைத்தது. அப்படி இருந்த காங்கிரஸ் இந்த முறை 3 இடங்களை பிடிக்க கூட முடியாமல் திணறி வருகிறது. இத்தனைக்கும் பிரியங்கா பிரசாரம் செய்தும் கூட கட்சி அதிக இடத்தில வெற்றி பெற முடியவில்லை.

1991க்கு பின் பல வருடங்கள் கழித்து மீண்டும் 2017ல்தான் உத்தர பிரதேசத்தில் பாஜக வென்றது. இப்போது மீண்டும் தொடர்ச்சியாக இரண்டாவது முறை உத்தர பிரதேசத்தை கைப்பற்றும் வாய்ப்பு பாஜகவிற்கு கிடைத்துள்ளது. கடந்த 37 வருடங்களாக உத்தர பிரதேச மக்கள் கட்சிகளை மாறி மாறித்தான் ஆட்சியில் அமர வைத்து இருக்கின்றனர்.

யோகி ஆதித்யநாத் மீண்டும் அங்கு முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். 37 வருட வரலாற்றை பாஜக மாற்றி அமைக்கிறது. யோகி, மோடி, அமித் ஷா என்ற மூன்று பெரும் தலைவர்களின் அரசியல் வியூகம் பாஜகவிற்கு இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

பாஜக உ.பியை இரண்டாவது முறைக்கு வெல்வது சாத்தியமே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் யோகி ஆதித்யநாத் அதை சாத்தியப்படுத்தி உள்ளார்.

Tags:    

Similar News