இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த மோசமான ரயில் விபத்துகள்
இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் பற்றிய செய்தி தொகுப்பு;
ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் இதுவரை 233க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
சம்பவ இடத்தில் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டுள்ளன. 30 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 700 பேர் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் விமானப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. 3 ரயில்கள் விபத்து என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.. இந்திய ரயில்வே வரலாற்றிலேயே ஒடிசா ரயில் விபத்து மிக கொடூரமான விபத்தாக கருதப்படுகிறது..
இதுவரை நிகழ்ந்த நாட்டின் கோர ரயில் விபத்துகள்
1981-ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி அன்று, பீகாரில் நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. பாலத்தை கடக்கும்போது பாக்மதி ஆற்றில் ரெயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 750க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி அன்று, புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஃபிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது மோதியது. அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை சுமார் 305 ஆகும்.
1998-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அன்று ஜம்மு தாவி – சீல்டா எக்ஸ்பிரஸ், பஞ்சாபில் உள்ள கன்னாவில் உள்ள ஃபிராண்டியர் கோல்டன் டெம்பிள் மெயிலின் தடம் புரண்ட மூன்று பெட்டிகள் மீது மோதியதில் 212 பேர் உயிரிழந்தனர்.
1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி அன்று வடக்கு எல்லை ரயில்வேயின் கதிஹார் பிரிவில் உள்ள கைசல் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவத் அசாம் எக்ஸ்பிரஸ் மீது பிரம்மபுத்திரா மெயில் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் 285க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்களில் பலர் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆவர்.
2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அன்று, கான்பூரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள புக்ராயனில் இந்தூர்-ராஜேந்திர நகர் எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 152 பேர் உயிரிழந்தனர். 260 பேர் காயமடைந்தனர்.
2010ம் ஆண்டு மே 28ம் தேதி அன்று, ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. மும்பை நோக்கிச் செல்லும் ரெயில் ஜார்கிராம் அருகே தடம் புரண்டது. அப்போது எதிரே வந்த சரக்கு ரயிலில் மோதி 148 பயணிகள் உயிரிழந்தனர்.
2002ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அன்று ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரஃபிகஞ்சில் தாவே ஆற்றின் பாலத்தின் மீது தடம் புரண்டதில் ரபிகஞ்ச் ரயில் விபத்துக்குள்ளானாது. இதில், 140-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு பயங்கரவாத நாசவேலையே காரணம் என கூறப்படுகிறது.
1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அன்று ராமேஸ்வரத்தில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரயில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் பயணம் செய்த 126 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை 30, 2012 அன்று, டெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே தீப்பிடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.