புவனேஷ்வரில் 100% மக்களுக்கு தடுப்பூசி- சாதனை நிகழ்த்திய முதல் இந்திய நகரம்

அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி 100% தடுப்பூசி போட்டு சாதனையை நிகழ்த்திய இந்தியாவின் முதல் நகரமாக ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வர் மாறியுள்ளது;

Update: 2021-08-02 06:17 GMT

அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி 100% தடுப்பூசி செலுத்தி கோவிட் -19-க்கு எதிராக 100 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்டு சாதனையை நிகழ்த்திய இந்தியாவின் முதல் நகரமாக ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வர் மாறியுள்ளது.மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு புவனேஷ்வர் மாநகராட்சி உதவி கமிஷனர் அன்ஷுமன் ராத் கூறும்போது, "கோவிட்-19க்கு எதிராக 100% மக்கள் தொகைக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதோடு புவனேஷ்வரில் உள்ள சுமார் ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது" என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறிய போது, "ஜூலை 31 ம் தேதிக்குள் புவனேஷ்வரில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிர்ணயித்தோம், அதன் படி 18 வயதுக்கு மேற்பட்டோர் 9 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு 2வது தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தி விட்டோம். இதில் 31,000 சுகாதார ஊழியர்கள், 33,000 முன் களப்பணியாளர்கள், 18-45 வயதுடையோர் பிரிவினர் 5 லட்சத்தி 17,000 பேர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 3,20,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஜூலை 30ம் தேதி வரை 18 லட்சத்து 35,000 வாக்சின்கள் செலுத்தப்பட்டுள்ளன" என்றார்.

இந்த இலக்கை எட்ட நகரம் முழுதும் 55 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் 30 தடுப்பூசி மையங்கள் இயக்கப்பட்டன.அதே போல் மொபைல் தடுப்பூசி மையங்களும் நகரம் முழுதும் ஏற்படுத்தப்பட்டன. இது தவிர பள்ளிகளில் நோய் தடுப்பாற்றல் மையங்கள் 15 என்ற எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. இது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டது. இந்தச் சாதனையை நிகழ்த்திய அனைத்து பணியாளர்களுக்கும் ஒத்துழைத்த மக்களுக்கும் கமிஷனர் தன் நன்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

Tags:    

Similar News