மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் குதித்த பயணி.. பெங்களூருவில் பரபரப்பு சம்பவம்
பெங்களூருவில் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு நகரின் ஜலஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தண்டவாளத்தில் குதித்ததால் பெங்களூரு மெட்ரோவின் கிரீன் லைன் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வாரத்தில் நடந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
ரயில் மெட்ரோ ரயில் நிலையத்தை நெருங்கியவுடன் 23 வயதான ஷரோன் என்பவர் தண்டவாளத்தில் குதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தண்டவாளத்தில் அந்த நபரை கவனித்த லோகோ பைலட், அவசர பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். இருப்பினும், ரயில் ஷரோனை ஓரளவு தாக்கியது. உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவரை மீட்டனர். இதனையடுத்து பி.எம்.ஆர்.சி.எல் ஊழியர்கள் உடனடியாக அவசர பயண அமைப்பு மூலம் ரயிலுக்கான மின்சார விநியோகத்தை நிறுத்தினர்.
இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கிரீன் லைனில் சேவைகள் இரவு 8 மணி வரை பாதிக்கப்பட்டன. பயணிகள் யஷ்வந்த்பூர் மெட்ரோ நிலையத்தில் இறங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும் மெட்ரோ சேவைகள் சில்க் இன்ஸ்டிடியூட் இடையே மட்டுமே இயக்கப்பட்டன. கிரீன் லைன் நடவடிக்கைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கப்படுவதாக பி.எம்.ஆர்.சி.எல் பின்னர் தெளிவுபடுத்தியது.
கடந்த ஜனவரி 1-ம் தேதி இந்திராநகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு பெண் தவறுதலாக கீழே விழுந்த செல்போனை எடுக்க தண்டவாளத்தில் குதித்தார். ஆனால், பிளாட்பாரத்திற்கு திரும்ப முடியாததால், பயணிகள் அவரை தண்டவாளத்தில் இருந்து பின்னுக்கு இழுத்தனர்.
பி.எம்.ஆர்.சி.எல் நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ் கூறுகையில், இது விசித்திரமான சம்பவம். தண்டவாளங்களுக்கு அருகில் இருந்தால் உள்ளார்ந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் பயணிகளுக்கு கடுமையான தடை உள்ளது.
தண்டவாளங்கள் 750 வோல்ட்களை சுமந்து செல்கின்றன. அந்தப் பெண் கீழே குதிப்பதைக் கவனித்த எங்கள் ஊழியரின் புத்திசாலித்தனமான நடவடிக்கைதான் அவரது உயிரைக் காப்பாற்றியது. இது மிகவும் ஆபத்தானது என்பதால் தண்டவாளத்தின் அருகே யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார்.