கொடுமையோ கொடுமை... நீரின்றி இறந்து கருவாடான மீன்..! வைரலாகும் புகைப்படம்
தண்ணீரில்லா ஏரியில் துடிக்கும் மீன்கள்.. வறட்சியின் பிடியில் நகரம்! மனிதனின் தவறால் மரணிக்கும் இயற்கை
பெங்களூரு நகரம் வரலாறு காணாத வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. அங்கு பணிபுரிபவர்கள் பலர் வீடு தேடி வரும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். குடிக்க மட்டுமின்றி பயன்படுத்துவதற்கான தண்ணீரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் பெங்களூரு வாழ் இளைஞர்கள் பலர்.
இயற்கையின் மீதான மனிதனின் ஆக்கிரமிப்புகள் அளவுக்கு அதிகமாகிவிட்டதோ என்ற அச்சம் எழுகிறது. வளர்ச்சி என்ற பெயரில், நகரமயமாக்கல் என்ற போர்வையில் நாம் செய்த, செய்துகொண்டிருக்கும் தவறுகளின் விளைவுகள் ஒவ்வொன்றாய் அம்பலமாகின்றன. பெங்களூரு நகரத்தில் நல்லூரஹள்ளி ஏரியில் தண்ணீரின்றி வறண்டுகிடக்கும் ஏரித்தளத்தில் உயிருக்குப் போராடி இறந்து கருவாடான மீனின் படம் நெஞ்சைப் பதற வைக்கிறது.
இது நேற்றல்ல, நீண்ட நாட்களின் அவலம்
ஒருகாலத்தில் நிரம்பி வழிந்த அதே நல்லூரஹள்ளி ஏரி தான், 2022-ம் ஆண்டில் பெய்த கனமழையால் புரண்டு ஓடி அருகிலிருந்த குடியிருப்புகளில் 400 க்கும் மேற்பட்ட வாகனங்களை தன்னுள் மூழ்கடித்தது. அப்போதே பெங்களூருவின் உள்கட்டமைப்பு பிரச்சனைகள் பற்றி நிறைய பேசப்பட்டது. ஆனால் இன்று, அதே ஏரியில் தண்ணீருக்கு பதிலாக வெறும் வறண்ட நிலம் தெரிகிறது. இந்தக் காட்சி நாம் உருவாக்கியிருக்கும் ஆழமான சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கண்முன் காட்டுகிறது.
30 ஆண்டுகளில் இல்லாத வறட்சி
கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மாநிலம் கடந்த 30 முதல் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வறட்சியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிய பெங்களூரு நகரில், மட்டும் கிட்டத்தட்ட 50 சதவீத போர்வெல்கள் வறண்டுவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தண்ணீர் மேலாண்மை – அதிகாரிகளின் அதிரடி முயற்சிகள்
பெங்களூருவின் நீர்வளங்களை கையாளும் பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB), இந்த நீர் நெருக்கடியை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகரின் பல ஏரிகளை சீரமைத்து, அங்கு தினமும் சுத்திகரிக்கப்பட்ட 1,300 மில்லியன் லிட்டர் தண்ணீரை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். ஏரிகளின் அருகே தொழில்நுட்பம் கொண்டு சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து சோதனைக்குப் பிறகு பயன்பாட்டிற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இயற்கையை மீட்டெடுக்க நாம் செய்ய வேண்டியவை
ஏரிக்கரைகளை ஆக்கிரமித்து அமைக்கப்படும் கட்டடங்கள், அளவுகடந்த நீர் உறிஞ்சுதல், தொழிற்சாலை கழிவுகளால் மாசுபடும் நீர்நிலைகள் - இவையெல்லாம் ஒரு நகரத்தின் சுற்றுசூழல் சீர்கேட்டிற்கு முக்கிய காரணங்கள். இனியும் கண்மூடித்தனமாக செயல்பட்டால் நாம் மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினரும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
வளர்ச்சியா? அழிவா?
அரசுகளும் பொதுமக்களும் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல், 'வளர்ச்சி'க்கு பலியாகும் இயற்கை, மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களையும் சேர்த்தே அழித்துவிடும் என்ற அபாயகரமான சூழ்நிலைக்குள் நாம் தள்ளப்படுவோம்.
சமூக அக்கறை அவசியம்
நம் ஒவ்வொருவரின் செயல்களுமே சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நீரை சிக்கனமாக பயன்படுத்துவது, மழைநீர் சேகரிப்பு முறைகளை கடைப்பிடிப்பது, பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தவிர்ப்பது - இவையெல்லாம் இயற்கையை காக்க நாம் அன்றாடம் செய்யக்கூடியவை.
நல்லூரஹள்ளி ஏரியின் பரிதாப நிலை ஒரு எச்சரிக்கை மணி. இந்த புகைப்படம் வெறும் செய்தித்தாளோடு நின்று விடக்கூடாது. ஒரு சமூகமாக, இயற்கையின் மீது நாம் கொண்டிருக்கும் அலட்சியத்தை உதறி, எதிர்காலத்திற்காக அவற்றை மீட்டெடுக்க பொறுப்பேற்க வேண்டிய தருணம் இது!