வேலை தேடுபவர்கள் என்பதைவிட வேலையை உருவாக்குபவர்களாக மாறுங்கள் -எம்.வெங்கையாநாயுடு

இளைஞர்களை வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற்றுவதற்கு வகை செய்யுமாறு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.;

Update: 2021-09-11 16:36 GMT

 குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையாநாயுடு

இளைஞர்களை வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற்றுவதற்காக பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு வகை செய்யுமாறு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.  சென்னையில் இன்று நடைபெற்ற இந்துஸ்தான் வர்த்தக சபையின் பிளாட்டினம் விழாவில் குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையாநாயுடு இதுகுறித்து கூறியதாவது :

இந்தியாவில் படித்த, திறமையான இளைஞர்கள் அதிகஅளவில் உள்ளனர்; அறிவியல் மனித வளமும் அதிகம் உள்ளது என்று குறிப்பிட்ட நாயுடு, ஆராய்ச்சி, வளர்ச்சிப் பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவதன் மூலம் புதுமையின் வளர்ச்சிக்கு ஏற்ற சரியான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார். இந்த சூழலில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

இதுபோன்ற கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதை எளிதாக்குவதில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (எச்.சி.சி) போன்ற அமைப்புகள் முனைப்பான பங்கு வகிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். வர்த்தக அமைப்புகளும், வியாபார சமுதாயமும் அவர்களது உறுப்பினர்களுக்கு பொதுவான நடத்தைமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் ஒட்டுமொத்த பெருநிறுவன மற்றும் வர்த்தக சமுதாயத்திற்கு கெட்ட பெயர் உண்டாக்கும் கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டும் என்றும் நாயுடு ஆலோசனை தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தல், திறன்மேம்படுத்துதல், அவர்கள் வேலைவாய்ப்பு பெறுவது மட்டுமல்லாமல் சுயதொழில் தொடங்கக்கூடிய திறன் கொண்டவர்களாக மாறவும் உறுதிசெய்யும் வண்ணம், ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் போன்ற அமைப்புகள், ஆவன செய்யவேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார். "வேலை தேடுபவர்கள் என்பதைவிட வேலையை உருவாக்குபவர்களாக மாறுவதற்கு அவர்களுக்கு தேவையான திறன்களும் அறிவும் வழங்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

Tags:    

Similar News