வந்தேமாதரம் எழுதிய வங்கக் கவிஞர்-பங்கிம் சந்திர சட்டர்ஜி பிறந்த தினம் இன்று
'வந்தேமாதரம்' பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி பிறந்த தினம் இன்று (ஜூன் 26).
'வந்தேமாதரம்' பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று (ஜூன் 26).
வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் காண்டல்படா கிராமத்தில் (1838) வசதியான குடும்பத்தில் பிறந்தார். தந்தை துணை ஆட்சியர். இவரை செல்லமாக வளர்த்த பெற்றோர், வீட்டிலேயே ஆசிரியர்களை வைத்துப் பாடம் கற்பித்தனர்.
மிட்னாப்பூர் கான்வென்ட் பள்ளியில் சேர்ந்தார். இளம் வயதிலேயே இயற்கைக் காட்சிகளில் மனதைப் பறிகொடுத்தார். வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். பள்ளியில் படிக்கும்போதே வங்கமொழியில் கவிதைகள் எழுதினார். இவரது கவிதைத் தொகுப்பு 'லலிதா ஓ மானஸ்' என்ற தலைப்பில் வெளிவந்தது.
ஆங்கிலத்தில் 'ராஜ்மோகன்ஸ் ஒய்ஃப்' என்ற கதையை எழுதினார். கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். துணை மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றினார். சட்டப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றார்.
இந்திய நாகரிகம், கலாச்சாரத்தை மக்கள் மதிக்காததால்தான் அந்நியர்கள் மனம்போனபடி நடக்கின்றனர் என கருதினார். இலக்கியத்தின் வாயிலாக, இந்தியக் கலாச்சாரத்தின் பெருமைகளை மக்களுக்கு உணர்த்தும் முனைப்புகளை மேற்கொண்டார்.
அதுவரை ஷேக்ஸ்பியர், மில்டர், ஷெல்லியைப் படித்துவந்த படித்த இளைஞர்கள், புராணம், உபநிஷதங்கள், பகவத்கீதை படிக்கத் தொடங்கினர். நமது இலக்கியம், மொழி, வரலாறு குறித்து விழிப்புணர்வும், பெருமிதமும் மக்கள் மத்தியில் பரவியது.
முதல் நாவலான 'துர்கேஷ் நந்தினி' 1865-ல் வெளிவந்தது. அடுத்தடுத்து, பல நாவல்கள் வெளிவந்து வங்க இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. 'வங்க தர்ஷன்' என்ற இலக்கிய இதழை 1872-ல் தொடங்கினார். இவர் உட்பட பல படைப்பாளிகளின் நாவல்கள், கதைகள், நகைச்சுவை சித்திரங்கள், வரலாற்றுக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் அதில் வெளியாயின.
எளிய, சரளமான நடையால் அனைவரையும் ஈர்த்தார். இவரது கதைசொல்லும் பாணி தனித்துவமானது. இவரது அனைத்து படைப்புகளும் ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'வங்காள எழுத்தாளர்களின் குரு, வங்க வாசகர்களின் நண்பர் பங்கிம்' என்பார் தாகூர்.
தாய்மொழி மீது மிகுந்த பற்று, பக்தி கொண்டவர். மதம், சமூகம், நடப்பு நிகழ்வுகள் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார். தனது படைப்புகள் வாயிலாக தேசிய உணர்வை மக்களிடம் எழுப்பினார். 1882-ல் வெளிவந்த 'வந்தேமாதரம்' பாடல் இடம்பெற்ற இவரது 'ஆனந்தமட்' நாவல் நாடு முழுவதும் புகழ்பெற்றது.
கல்கத்தாவில் 1896-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடல் பாடப்பட்டது. 'தாயை வணங்குவோம்' என்று பொருள்படும் 'வந்தேமாதரம்' கோஷம் இந்திர சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாரக மந்திரமாக மாறி, நாடு முழுவதும் ஒலித்தது. இது ஆங்கில அரசை நடுநடுங்க வைத்தது. வன்முறையைத் தூண்டுவதாக கூறி இந்த கோஷத்தை அரசு தடை செய்தது. பின்னர் இப்பாடல் இந்திய தேசத்தின் கீதமாகப் புகழ்பெற்றது.இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.
இறுதி நாட்களில் ஆன்மிகம் குறித்து எழுதினார். நவீன வங்க இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகப் போற்றப்படும் பங்கிம் சந்திர சட்டர்ஜி 56-வது வயதில் (1894) நோய்வாய்ப்பட்டு காலமானார்.