126 வயது பாபா சிவானந்தரின் உடலுறுதி: பிரதமர் நரேந்திர மோடி கூறும் காரணம்
கண்ணிமைக்கும் நேரத்திற்கு உள்ளாக அவர் நந்தி முத்திரையில் வணக்கம் செய்யத் தொடங்கியதை கவனித்தேன் -பிரதமர் நரேந்திர மோடி;
பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில், 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி, 87 வது முறையாக அவர் இன்று நாட்டு மக்களுடன் உரையாடினார்.
அந்த உரையில் அவர் பாபா சிவானந்தர் பற்றி பேசியதாவது:
தற்போது நடைபெற்ற பத்ம விருதுகள் அளிக்கப்படும் நிகழ்ச்சியில் நீங்கள் பாபா சிவானந்த் அவர்களைக் கண்டிப்பாக கவனித்திருப்பீர்கள். 126 வயது நிரம்பிய பெரியவரின் சுறுசுறுப்பைப் பார்த்து, என்னைப் போலவே அனைவரும் ஆச்சரியத்திலே ஆழ்ந்து போயிருப்பார்கள். கண்ணிமைக்கும் நேரத்திற்கு உள்ளாக அவர் நந்தி முத்திரையில் வணக்கம் செய்யத் தொடங்கியதை கவனித்தேன். நானுமே கூட குனிந்து மீண்டும் மீண்டும் பாபா சிவானந்தருக்கு வணக்கம் தெரிவித்தேன். 126 வயது, பாபா சிவானந்தரின் உடலுறுதி, என இந்த இரண்டும் இன்று தேசத்தின் விவாதப் பொருளாகி இருக்கின்றன. சமூக வலைத்தளத்தில் பலரின் கருத்துக்களை நான் கவனித்தேன், அதாவது பாபா சிவானந்தர், தனது வயதை விட 4 மடங்கு குறைந்த வயதானவரை விடவும் அதிக உடலுறுதியோடு இருக்கிறார் என்பது போன்று. மெய்யாகவே, பாபா சிவானந்தரின் வாழ்க்கை நம்மனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கவல்லது. அவருடைய நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். அவரிடத்திலே யோகக்கலை தொடர்பான ஒரு பேரார்வம் இருக்கிறது, மிக ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அவர் வாழ்ந்து வருகிறார்.
ஜீவேம சரத: சதம்.
நமது கலாச்சாரத்தில் அனைவருக்குமே 100 ஆண்டுக்காலம் வாழ நல்வாழ்த்துக்கள் அளிக்கப்படுகிறது. நாம் ஏப்ரல் 7 அன்று உலக ஆரோக்கிய தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். இன்று உலகெங்கிலும் ஆரோக்கியம் தொடர்பாக பாரதநாட்டு எண்ணப்பாடு, அது யோகக்கலையாகட்டும், ஆயுர்வேதமாகட்டும், இவை தொடர்பாக ஆர்வம் அதிகரித்து வருகிறது. இப்போது கூட நீங்கள் கவனித்திருக்கலாம், கடந்த வாரத்தில் கத்தார் நாட்டில் ஒரு யோகக்கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலே 114 நாடுகளின் குடிமக்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள், இது ஒரு புதிய உலக சாதனையாக ஆனது. இதைப் போலவே, ஆயுஷ் தயாரிப்புத் துறையின் சந்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆயுர்வேதத்தோடு தொடர்புடைய மருந்துகளுக்கான சந்தை 22,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றோ, ஆயுஷ் தயாரிப்புத் துறை, ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டி வருகிறது. அதாவது இந்தத் துறையின் சாத்தியக்கூறுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஸ்டார்ட் அப் உலகிலும் கூட ஆயுஷ், ஈர்ப்பை ஏற்படுத்தும் விஷயமாக ஆகி வருகிறது.