தொலைநிலை கல்வியில் பட்டப்படிப்புகள் நடத்த 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொலைநிலை கல்வியில் பட்டப்படிப்புகள் நடத்துவதற்கு அங்கீகாரம் பெற வரும் 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என யுஜிசி அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, பல்கலைகழக மானிய குழுவான யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:
அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களும், திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வியிலும், ‘ஆன்லைன்’ வழியிலும், பட்டப்படிப்புகளை நடத்த, யுஜிசியில் முறையான அங்கீகாரம் பெற வேண்டும். வரும் 2023-24 ம் கல்வியாண்டில், பல்கலைகழகங்கள் தொலைநிலை படிப்பை நடத்த, வரும் 15ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை https://deb.ugc.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பட்டப்படிப்புகளோடு கூடுதலாக பாடப்பிரிவுகள் துவங்க விரும்பினால் அதனையும் குறிப்பிட வேண்டும். இணையதளம் வழியே விண்ணப்பித்த பின், அதன் சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் அசல் உறுதிமொழிக் கடிதம் ஆகியவற்றுடன் இணைச் செயலாளர், தொலைதூரக் கல்விப் பணியக முகவரிக்கு ஏப்ரல் மாதம் 15க்குள், யுஜிசிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும், விண்ணப்பம் அளிப்பதால் மட்டும் அங்கீகாரம் பெற்றதாக கருதப்படாது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.