ஆந்திரா 2024 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் ஜெகன் சவால்
சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் 175 தொகுதியில் தனித்து போட்டியிட தயாரா? அவர்களுக்கு அந்த தைரியம் உள்ளதா? என முதல்வர் ஜெகன் கேள்வி எழுப்பினார்.;
பைல் படம்.
ஆந்திர மாநிலத்தில் வரும் 2024 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இம்முறையும் தனித்து களமிறங்க உள்ளது. அதே நேரத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியும், நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிகொள்ள உள்ளனர். இந்நிலையில் ஜனசேனா கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
மேலும், தெலுங்கு தேச கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைத்தால், பாஜக, ஜனசேனா, தெலுங்கு தேசம் என மூன்று கட்சிகளும் இணைந்து வரும் 2024 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினை எதிர்த்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சியான ஜெகன் மோகன் ரெட்டிக்கும் தேர்தல் நெருங்குவதால் நெருக்கடிகளும் அதிகரித்து வருகிறது. உள்கட்சி பூசல், கட்சியில் உள்ள 2 ம் நிலை, 3 ம் நிலை தலைவர்கள் கட்சி தாவுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தற்போது ஜெகன் மோகன் ரெட்டிக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. மேலும் ஆந்திரா அரசு தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.
மாத ஊதியம் தர காலதாமதம் ஆவதால் அரசு ஊழியர் சங்கத்தினர், முதல்வருக்கும் அரசுக்கும் எதிராக போர் கொடி தூக்கி உள்ளனர். போலீசாரும் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று தெனாலியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளோம். தேர்தல் வாக்குறுதியில் 98 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். எங்களின் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி. எனவே இம்முறையும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம். சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் 175 தொகுதியில் தனித்து போட்டியிட தயாரா? அவர்களுக்கு அந்த தைரியம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். வரும் ஆட்சி ஏழைகளின் ஆட்சிக்கும், பணக்காரர்களின் ஆட்சிக்கும் இடையேயான போர். இந்த போரில் யார் வெற்றி பெறுவார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி பேசினார்.