Ambedkar in tamil: அம்பேத்கர் எனும் மகத்தான ஆளுமை

சமூக விடுதலைக்கு போராடிய அம்பேத்கர், மூடநம்பிக்கை தளையை உடைத்த பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகள் கம்பி போட்ட கூண்டுக்குள் இருப்பது நகைமுரண்

Update: 2023-02-12 11:37 GMT

அம்பேத்கர்

அம்பேத்கர் பற்றி கேட்டால், பெரும்பாலும் ‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என்று தான் கூறுவர்

ஆனால் அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையை இது போன்ற சிறிய வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது. காரல் மார்க்ஸுக்கும் அம்பேத்கருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் தங்கள் வாழ்க்கையின் கணிசமான பகுதியை நூலகங்களில் செலவழித்தவர்கள். மனித சமூகத்தின் மேம்பாடு குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தவர்கள்.

காரல் மார்க்ஸுக்கும் அம்பேத்கருக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை, மனித குல வரலாற்றை வர்க்கங்களின் வரலாறாக, மக்கள் முன் அளித்தவர் மார்க்ஸ். சாதி என்ற காரணி எப்படி இந்திய வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் தீர்மானித்தது என்று விரிவாக ஆராய்ந்தவர் அம்பேத்கர்.

அம்பேத்கர் வெறுமனே சட்ட மேதையோ, தலித் தலைவரோ மட்டும் அல்ல. அரசியல், இலக்கியம், தத்துவம், இதிகாசம், வரலாறு, மதம், சட்டம், பொருளாதாரம் என மனித அறிவு சாதித்த துறைகளில் பெரும்பாலானவை குறித்த விரிவான வாசிப்பும் அறிதலும் கொண்டவர்.

அவருடைய முனைவர் பட்ட ஆய்வு என்பது ரூபாய் குறித்தது என்றும் ரிசர்வ் வங்கியை உருவாக்கியதில் முக்கியமான பங்கு அம்பேத்கருடையது என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்?

அம்பேத்கர் இந்திய நாட்டின் ஒளிமிகுந்த எதிர் காலத்தைப் பற்றி கனவு கண்ட இலட்சிய மனிதர். அவர் உயரிய ஆளுமைத் திறனைக் கொண்டவர். உரிமைக்காக உழைத்தவர்.

சமுதாயம் எனும் மரத்தின் வேரைச் சாதிப்புழுக்கள் அரித்து விடாமல் தடுத்த நச்சுக்கொல்லி மருந்து அவர். கல்வி அறிவின்றி நாடு முன்னேற முடியாது என்று உணர்ந்தவர்.

அவர் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காகத் தம்மை முழுவதும் அர்பணித்துக் கொண்டவர்.

அம்பேத்கர் வெறுமனே கற்றறிந்த அறிவுஜீவியாக மட்டும் இருந்திருந்தால், கோடிக்கணக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் மாமனிதராக இருந்திருக்க மாட்டார். அவர் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்காகவே அதிகம் படித்தார். தன்னுடைய அறிவை சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார்

எனவே கல்வி, அரசியல் அதிகாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் காலங்காலமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பவர்களுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்க வேண்டும் என்றார். அதனாலேயே இட ஒதுக்கீட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமையையும் முன்வைத்தார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெறுவதற்கு அம்பேத்கர் நம்பிய சில வழிகள் கல்வி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல், சமவாய்ப்புகளை உருவாக்குதல், மதமாற்றம் ஆகியன.

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாய் நடத்தும் சமத்துவ இந்தியாவை உருவாக்க விழைந்தார்

அம்பேத்கர் நமக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘என்னை விட உயர்ந்தவனும் இல்லை, என்னை விட தாழ்ந்தவனும் இல்லை என்பதே.

மத்திய அரசு அம்பேத்கருக்கு 1981 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” என்னும் உயரிய விருதை வழங்கிப் பெருமைப்படுத்தியது.

இவ்வளவு பாடுபட்ட அம்பேத்கரை தலித் தலைவராக மட்டுமே நாம் பார்க்கிறோம்.  நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் சிலைகள் சுதந்திரமாக இருக்க,  சமூக விடுதலைக்கு போராடிய அம்பேத்கர், மூடநம்பிக்கை தளையை உடைத்த பெரியார் போன்ற தலைவர்கள் சிலைகள் கம்பி போட்ட சிறைக்குள் இருப்பது நகைமுரண்

Tags:    

Similar News