பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 பேரும் இன்று சரண்

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 பேரும் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைகிறார்கள்.

Update: 2024-01-21 03:59 GMT

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு ஆரத்தி எடுக்கப்பட்ட காட்சி (கோப்பு படம்).

பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரின் முன்கூட்டிய விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் அவர்கள் இன்று சிறையில் சரணடைய உள்ளனர். கடந்த 2002ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி ரயில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 59 இந்து யாத்திரிகர்கள் இறந்தனர். இதையடுத்து பெரிய அளவில் குஜராத்தில் வன்முறை வெடித்தது. தீவைப்பு சம்பவங்கள், கல்வீச்சு உள்ளிட்டவை நடந்தது.

மேலும் இருபிரிவினர் இடையே இந்த மோதல்  உருமாறி கலவரமானது. ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அதோடு அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றம்சாட்டுக்கு உள்ளான 11 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்தது. இதையடுத்து அவர்கள் கடந்த 2008 ம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டனர். 14 ஆண்டுகளை தாண்டி தண்டனை அனுபவித்த நிலையில் தங்களை விடுதலை செய்யும்படி நீதிமன்றத்தை நாடினர். குஜராத் நீதிமன்றம் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றம் மாநில அரசு முடிவு எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 11 பேரையும் முன்கூட்டி விடுதலை செய்வதாக குஜராத் பாஜக அரசு அறிவித்தது. இதையடுத்து 11 பேரும் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கோத்ரா கிளை சிறையில் இருந்து விடுதலையானவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றது சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து அவர்கள் 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்கள் 11 பேரின் விடுதலையை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது.மேலும் அவர்களை விடுதலை செய்த குஜராத் அரசை நீதிமன்றம் கடிந்து கொண்ட நிலையில் அவர்கள் 11 பேரும் ஜனவரி 21ம் தேதிக்குள் சிறையில் சரணடைய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது.

இதற்கிடையே தான் மிதேஷ் சிமன்லால் பட், ரமேஷ் ரூபாபாய் சந்தனா, கோவிந்த்பாய் உள்ளிட்டவர்கள் தங்களின் உடல்நலம், பெற்றோரின் உடல்நலம் மற்றும் விவசாய அறுவடையை காரணம் காட்டி 4 முதல் 6 வாரம் வரை சரணடைவதில் விலக்கு கோரினார். இதனை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும் ஜனவரி 21ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி 11 பேரும் சரணடைய உச்சநீதிமன்றம் வழங்கிய காலக்கெடு என்பது இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது.

இதனால் இன்று 11 பேரும் சிறையில் சரணடைய உள்ளனர். ஒருவேளை அவர்கள் சரணடையாவிட்டால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதோடு, நீதிமன்றம் கூறியும் சரணடைய தவறியது மற்றும் அதனை சார்ந்த வழக்குகளை எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News