இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: அல்கொய்தா அமைப்பு மிரட்டல்
இஸ்லாமியர்களின் இறை தூதர் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட பாஜக நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அல்கொய்தா அமைப்பு இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
கடந்த 27ம் தேதி ஆங்கில செய்திச்சேனலில் நடந்த விவாதத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்று பேசினார். ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பான இந்த விவாதத்தில், சிவலிங்கம் குறித்து எதிர்த்தரப்பில் ஒருவர் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் இறைத்தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து தெரிவித்ததாக, குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்த நிலையில், நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது.
எனினும், இஸ்லாமிய நாடுகள் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தன. அத்துடன், இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கோரி வருகின்றன. கட்சியை சேர்ந்த தனி நபரின் கருத்து, அரசின் கருத்தாகாது என்று இந்திய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இச்சூழலில், இஸ்லாமிய இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என்று, பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா, மிரட்டல் விடுத்துள்ளது.
கடந்த 6-ம் தேதி இடப்பட்ட கடிதத்தில், நபிகளின் கண்ணியத்தை காக்க டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம். தங்களது செயலுக்காக காவி பயங்கரவாதிகள் காத்திருக்க வேண்டும் என்று, அக்கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அல்கொய்தா அமைப்பு தற்கொலை மிரட்டல் விடுத்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.