புதுடில்லியில் காற்று மாசுபாடு: மின், எரிவாயு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி
புதுடில்லியில் காற்று மாசுபாடு காரணமாக மின், எரிவாயு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
புதுடில்லியில் நேற்று காற்றின் வேகம் சற்று அதிகரித்ததால் காற்றின் மாசு அளவு சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால் தொடர்ந்து அபாய அளவைவிட அதிகமாகவே இருந்து வருகிறது.
குளிர்காலத்தில், காற்று மாசின் அளவு, கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து புதுடெல்லியில் அதிகரித்து வருகிறது. உலக அளவில், காற்று மாசு மிகவும் அதிகம் உள்ள தேசிய தலைநகர்களில் ஒன்றாக புதுடில்லி உள்ளது.
பருவநிலை மாறுபாடு, வாகனப்புகை, பட்டாசுகள் வெடிப்புதால் ஏற்படும் புகை, அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பின் பயிர் கழிவுகள் எரிப்பு மற்றும் உச்சத்தில் இருக்கும் கட்டுமான பணிகள் ஆகியவைகளால் புதுடில்லியில் காற்றின் மாசு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
புதுடில்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிகவும் அதிகரித்து வருகிறது. காற்றின் தரக் குறியீடு, ஒரு வாரத்தில், 200 குறியீடுகள் அதிகரித்துள்ளன. இந்தக் குறியீடு 450க்கு மேல் இருந்தால், அது கடும் தீவிரம் என்ற நிலையை எட்டியுள்ளது.
புதுடில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் பல பகுதிகளில், 450 குறியீட்டுக்கு அதிகமாகவே காற்றின் தரம் இருந்து வருகிறது. சில இடங்களில், அளவுமானியில் உள்ள உச்ச அளவான 999ஐ தாண்டியுள்ளது.
இதனால் மக்களை வீடுகளிலேயே இருக்கும்படி, மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாசு அளவு தொடர்ந்து அதிகமாக இருப்பதால், டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகள் நவம்பர் 10 ஆம் தேதி வரை மூடப்படும். 6-12 வகுப்புகளுக்கு, ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறுவதற்கான விருப்பம் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது என்று டெல்லி கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்திர யாதவுக்கு, புதுடில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் காற்று மாசை ஏற்படுத்தாத மின்சாரம், இயற்கை எரிவாயுவால் இயங்கும் வாகனங்களை மட்டுமே புதுடில்லிக்குள் அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்படி, இன்று காலை 5 மணிக்கு காற்றுத் தரக் குறியீடு (AQI) 457 என்ற நிலையில் டெல்லி-என்சிஆர் குடியிருப்பாளர்களுக்கு 'கடுமையான' வகை காற்று மாசுபாட்டின் மற்றொரு நாளாக உள்ளது.
காற்று மாசுபாட்டால் கண்களில் எரியும் உணர்வு, இருமல் மற்றும் பிற பிரச்சினைகள் ஏற்படுவதாக குடியிருப்பாளர்கள் புகார் கூறி வருகின்றனர். லோதி கார்டனில் காலை நடைபயிற்சி செய்பவர் அஜய் கூறுகையில், “மாசுபாட்டால் கண்களில் எரியும் உணர்வை அனுபவிக்கிறோம். முன்பு நிலைமை நன்றாக இருந்தது, ஆனால் இப்போது அது மோசமாகி வருகிறது.
உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் டெல்லி, கொல்கத்தா, மும்பை: சுவிட்சர்லாந்தின் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் தரவு இன்று உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையை பட்டியலிட்டுள்ளது.