ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு
கேரளாவில் இருந்து 105 பயணிகளுடன் இன்று காலை புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக உடனடியாக திரும்பியது.;
105 பயணிகளுடன் மஸ்கட் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் உள் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று காலை 8.30 மணியளவில் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 105 பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானிகளில் ஒருவர் கவனித்து உள்ளார். இதனை தொடர்ந்து, உடனடியாக விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 9.17 மணியளவில் பாதுகாப்பாக விமானம் வந்து சேர்ந்தது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் என விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, பயணிகளுக்கு மாற்று விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதன்படி, அந்த விமானம் மதியம் 1 மணியளவில் புறப்பட்டு மஸ்கட்டுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.