விமானப்படைத் தலைவராக ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி பொறுப்பேற்றார்
பல்வேறு விமானங்களில் 3800 மணி நேரத்திற்கும் மேல் இவர் பறந்துள்ளார், பல்வேறு முக்கிய பொறுப்புகளை இவர் திறம்பட ஆற்றியுள்ளார்.;
விமானப்படை தலைமையகத்தில் (வாயு பவன்) இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப்படைத் தலைவராக ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுத்ரி பொறுப்பேற்றார்.
தேசிய ராணுவ அகாடெமியில் பயிற்சி பெற்ற விமானப் படை தலைவர், இந்திய விமானப்படையின் வீரர் பிரிவில் டிசம்பர் 1982-ல் இணைந்தார். பல்வேறு விமானங்களில் 3800 மணி நேரத்திற்கும் மேல் இவர் பறந்துள்ளார்.
சுமார் நான்கு தசாப்தங்களாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை இவர் திறம்பட ஆற்றியுள்ளார். மிக்-19 படைப்பிரிவு, இரண்டு விமானப்படை நிலையங்கள் மற்றும் மேற்கு விமானப்படை தலைமையகத்தை அவர் தலைமையேற்றுள்ளார். விமானப்படை துணை தளபதி, கிழக்கு விமானப்படை தலைமையகத்தில் மூத்த படை அதிகாரி, விமானப்படை செயல்பாடுகள் (வான் பாதுகாப்பு) துணை தலைவர், விமானப்படை துணை தலைவர் (பணியாளர் அலுவலர்கள்), விமானப்படை அகாடெமி துணை தளபதி மற்றும் விமானப் படை தலைவரின் வான் உதவியாளர் உள்ளிட்ட பல பதவிகளை அவர் வகித்துள்ளார்.
விஷிஷ்ட் சேவா பதக்கம், அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், வாயு சேனா பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ள ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுத்ரி, குடியரசுத் தலைவரின் கவுரவ உதவியாளராகவும் (ஏடிசி) உள்ளார்.
இந்திய விமானப்படைக்கு அவர் ஆற்றிய உரையில், விமானப்படையை தலைமையேற்று நடத்தும் பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து பெருமையடைவதாக ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுத்ரி தெரிவித்துள்ளார். படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்த அவர், வழங்கப்பட்ட அனைத்து பணிகளையும் திறம்பட செய்து முடித்து இந்திய விமானப்படையின் செயல்திறனை இதுவரை இல்லாத அளவு உச்சத்தில் வைக்கும் திறன் படையினருக்கு உள்ளது என்ற முழு நம்பிக்கை தமக்கிருப்பதாக கூறினார்.