அக்னிபத் திட்டம்: இளைஞர்கள் போராட்டத்திற்கு புரிதல் இல்லை என்பதே காரணமா?
Live Protest Today -அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்துவதற்கு புரிதல் இல்லை என்பது காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.;
Live Protest Today - உலகின் பலமான நாடுகளில் ஒன்றான இந்திய அரசின் பாதுகாப்பு துறை கடந்த 14ஆம் தேதி 'அக்னிபத்'என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது. இது முழுக்க முழுக்க ராணுவ ஆள்சேர்ப்பு தொடர்பான ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கம் வலுவான இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்தி நமது இளைஞர்களின் மனிதவளம் வீணாவதைத் தடுத்து அவர்களை நாட்டின் பாதுகாப்பு பணியில் சேர்க்க வேண்டும் என்பதே தலையாய நோக்கம் என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருந்தார்.
அந்த திட்டத்தின் பலன்கள் அதன் மூலம் இளைஞர்கள் அடையும் நன்மைகள் பற்றியும் விரிவாக கூறப்பட்டு இருந்தது. ஆனால் இந்த அக்னிபத் திட்டத்துக்கு நாட்டின் பல பகுதிகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இளைஞர்கள் தங்கள் எதிர்ப்பை வன்முறை மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பீகாரில் ஏராளமான ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டதால் ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்திலும் அதே நிலைதான். தென் மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியாகி உள்ளார். தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அக்னிபத் திட்டத்தின் நோக்கம் என்ன என்பதை மத்திய அரசு தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது. ஆனால் இளைஞர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதற்கு காரணம் அந்த திட்டம் பற்றிய புரிதல் அவர்களுக்கு இல்லையா அல்லது அதில் மாற்றங்கள் தேவையா என்பதை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது நாட்டில் வெளிநாட்டு சக்திகளின் கைக்கூலிகள் ஏராளமாக உள்ளனர். அவர்கள் இளைஞர்களை தூண்டிவிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறார்களா? இந்தக் கோணத்திலும் சிந்திக்க வேண்டியது உள்ளது. இதில் வெளிநாட்டு சதி எதுவும் இருக்கிறதா என்பதையும் மத்திய அரசின் புலனாய்வுத் துறை உடனடியாக விசாரிக்க வேண்டும். காரணம் வலுவான இந்திய ராணுவம் மேலும் வலுவடைந்து விட்டால் மனித வளம் மிக்க இந்தியாவை அசைக்க முடியாது என்ற கோணத்தில் நமது அண்டை நாடான சீனா மற்றும் பாகிஸ்தான் கூட இந்த குறுக்கு புத்தியில் ஈடுபடக் கூடும் என்பதால் மத்திய அரசு இதில் உடனடி கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகும். அக்னிபத் திட்டத்தில் உண்மையிலேயே இளைஞர்களுக்கு எதிரான அம்சங்கள் இருந்தால் அதனை நீக்கிவிட்டு திட்டத்தை சீரான நோக்கத்தில் அறிவிக்க பரிசீலனை செய்ய வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2