குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அமெரிக்க சட்ட நிறுவனத்தை நியமித்த அதானி குழுமம்?

ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.;

Update: 2023-02-10 17:00 GMT

பைல் படம்.

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது. அந்த அறிக்கையில், "அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்" என கூறப்பட்டிருந்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய ஆரம்பித்தன. இந்த சூழ்நிலையில், ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான வாச்டெல்லை அதானி குழுமம் நியமித்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

அதானி குழும பங்குகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை கையாள்வது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக வாட்ச்டெல், லிப்டன், ரோசன் & காட்ஸ் நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர்களை நியமித்துள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட இந்த சட்ட நிறுவனம், கார்ப்பரேட் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றது. பெரிய மற்றும் சிக்கலான பரிவர்த்தனைகளை தொடர்ந்து கையாளுகிறது.

ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது என்றும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன என்றும் அதானி குழுமம் கூறியது. அமெரிக்க நிறுவனங்கள் பலனடைய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News